ADDED : பிப் 14, 2024 04:53 AM

ஹாசன் : லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, ம.ஜ.த.,வின் முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடாவுக்கும் இடையே வார்த்தை போர் துவங்கி உள்ளது.
ஹாசன், மாண்டியா லோக்சபா தேர்தல் தொடர்பாக பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா, ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ஆகிய இருவரும் முரண்பாடான அறிக்கை வெளியிட்டனர்.
இதனால் இரு கட்சி தொண்டர்களும் குழப்பம் அடைந்தனர். ஆனால், இரு கட்சி மேலிட தலைவர்களோ, தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகவில்லை என்றனர்.
இதற்கிடையில், ம.ஜ.த.,வின் முன்னாள் முதல்வர் குமாரசாமி, 'பிரீத்தம்கவுடா எனது சொந்தக்காரர் போன்றவர். கருத்து வேறுபாடு இருந்தால் பேசி தீர்த்து கொள்வோம். பிரீத்தம் விருப்பப்பட்டால் ஹாசனில் நிற்கலாம். லோக்சபா தேர்தலை கூட்டணி கட்சிகள் இணைந்து சந்திக்க வேண்டும்' என கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து, பிரீத்தம்கவுடா கூறியதாவது:
அரசியலில் சகோதர - சகோதரிகளாக இருக்க முடியாது. குமாரசாமிக்கு விருப்பம் இருந்தால், அவரது சொந்த அண்ணனிடம் பேசட்டும். அவர் போட்டியிடுவதா, இல்லையா என்பதை அக்கட்சி முடிவு செய்யட்டும்.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில், ஹாசனில் என்னை தோற்கடித்த குமாரசாமியின் எந்த ஆலோசனையும் எனக்கு தேவையில்லை. என் மீது நம்பிக்கை வைத்து 78,000 வாக்காளர்கள் எனக்கு ஓட்டு போட்டு உள்ளனர். இதன் மூலம் ஹாசனில் எனது பலம் என்ன என்பது புரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

