மோடி பிரதமர் ஆவதை யாராலும் தடுக்கவே முடியாது! மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா சூளுரை
மோடி பிரதமர் ஆவதை யாராலும் தடுக்கவே முடியாது! மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா சூளுரை
ADDED : ஜன 08, 2024 11:06 PM

பெங்களூரு: ''நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவதை எந்த தீய சக்தியாலும் தடுக்க முடியாது. நாடு முழுதும் பா.ஜ.,வுக்கு ஆதரவான சூழல் நிலவுகிறது,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
பெங்களூரில் தனியார் ஹோட்டலில் நேற்று, லோக்சபா தேர்தல் தொடர்பான பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:
லோக்சபா தேர்தலில், மாநில காங்கிரஸ் அரசுக்கு வாக்காளர்கள் தக்க பாடம் புகட்ட உள்ளனர். 28 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும். இதற்காக அனைவரும் பாடுபட வேண்டும். சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது.
காங்கிரசின் 'ஜிமிக்கி' வாக்குறுதியை நாட்டு மக்களும், அறிவார்ந்த வாக்காளர்களும் நம்பத் தயாராக இல்லை.
இதன் விளைவாக, மோடியின் ஆட்சியே சிறந்தது என்பதை வாக்காளர்கள் உணர்ந்து உள்ளனர்.
அடுத்த தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், மோடி மூன்றாவது முறையாக பிரதமாக வருவார். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவதை எந்த தீய சக்தியாலும் தடுக்க முடியாது.
நாடு முழுதும் பா.ஜ.,வுக்கு ஆதரவான சூழல் நிலவுகிறது. அவரது தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும்.
காங்கிரசின் திறமையற்ற நிர்வாகத்தால் நிதி அமைப்பு சீர்குலைந்துள்ளது.
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அரசு முற்றிலும் தவறிவிட்டது. 14 பட்ஜெட்களை தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையா, ஆதார் குறியீட்டு விவகாரத்தில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளார்.
கடும் வறட்சியால் 500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோதும், அவர்களுக்கு நிவாரணம் வழங்காத மாநில அரசு, மத்திய அரசை குற்றம்சாட்டுகிறது.
எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, இயற்கை சீற்றங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கியதை மக்கள் மறக்கவில்லை. எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பணத்தையும் மாற்றி, தலித்களுக்கு இந்த அரசு அநீதி இழைத்து உள்ளது.
இதற்காக காங்கிரஸ் அரசை மக்கள் சபிக்கின்றனர். ராமர் கோவில் திறப்பை லட்சக்கணக்கான ஹிந்துக்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனால், அவர்கள் வீடுகளில் பண்டிகை சூழல் நிலவுகிறது.
ஆனால் ராமரின் இருப்பையே கேள்விக்குறியாக்கிய காங்கிரஸ், கர்நாடகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சடங்குகள் இல்லாமல் பூஜை நடத்த சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. இது ராம பக்தர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, தேசிய பொதுச் செயலர் அருண் சிங், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, எம்.பி., சதானந்த கவுடா, எதிர்க்கட்சி தலைவர் அசோக், சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் சீனிவாச பூஜாரி உட்பட பலர் பங்கேற்றனர்.
சமீப காலமாக பா.ஜ.,வின் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்த அரவிந்த் லிம்பாவளி, நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அவரை போன்று முன்னாள் அமைச்சர் சுதாகரும் பங்கேற்றார்.
எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால், சோமசேகர், முன்னாள் அமைச்சர் சோமண்ணா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.