இது செலவு என்று சொல்லமாட்டேன்; சோஷியல் இன்வெஸ்ட்மென்ட் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
இது செலவு என்று சொல்லமாட்டேன்; சோஷியல் இன்வெஸ்ட்மென்ட் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஆக 26, 2025 10:01 AM

சென்னை: காலை உணவு திட்டம் ஆண்டும் ஒன்றுக்கு ரூ.600 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது செலவு என்று சொல்லமாட்டேன். சூப்பரான சோஷியல் இன்வெஸ்ட்மென்ட் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, சென்னையில் இன்று (ஆகஸ்ட் 26) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இங்கே வந்து குழந்தைகளுடன் உணவு சாப்பிட உடன் குழந்தைகள் மாதிரி எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது. நீங்கள் எப்படி இன்றைக்கு முழுவதும் ஆக்டிவாக இருப்பீர்களோ, அது மாதிரி எனக்கு இன்றைக்கு ஆக்டிவான தினம் தான்.
பசியும், பிணியும்
இன்று மனசுக்கு ரொம்ப நிறைவான நாள். 20 லட்சம் மாணவர்கள் இன்று காலை உணவு சாப்பிடுவதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? பசியும், பிணியும், பகையும் இல்லாத நாடு தான், சிறந்த நாடாக பாராட்டப்படும் என்று சொல்லி இருக்கிறது. கல்வி அறிவை வழங்குவதாக மட்டும் பள்ளிகள் இருக்க கூடாது.
மாணவர்களின் வயிற்று பசியையும் போக்க வேண்டும். காலை உணவு திட்டத்தை தொடங்கியதற்கு காரணம் என்னவென்றால், ஆட்சி பொறுப்பெற்ற சில நாட்களில் சென்னை அசோக் நகரில் உள்ள பள்ளியில் மாணவ, மாணவர்களின் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டேன்.
இது செலவு அல்ல
நிறைய குழந்தைகள் சாப்பிடவில்லை என்று சொன்னார்கள். இதனை மனதில் வைத்து தான் காலை உணவு திட்டத்தை அறிவித்தேன். காலை உணவு திட்டத்தை நானே நேரில் கண்காணித்து வருகிறேன். ஆண்டு ஒன்றுக்கு ரூ.600 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இது செலவு என்று சொல்லமாட்டேன். சூப்பரான சோஷியல் இன்வெஸ்ட்மென்ட். எதிர்காலத்தில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தமிழ் சமுதாயத்திற்கு தர போகிற முதலீடு இது.
சோர்வாக…!
பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசி காரணமாக சோர்வாக இருக்க மாட்டார்கள். காலை உணவு திட்டம் தொடங்கியதில் இருந்து நேரடியாக கண்காணித்து வருகிறேன். மாநில திட்டக்குழு மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பசி இல்லாத நிலை. டிசம்பர் 2023ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை அரசு பள்ளிகளில் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரித்து உள்ளது. மருத்துவமனைக்கு போவது குறைந்து இருக்கிறது. காலை உணவு திட்டத்தில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. கற்றல் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆல் தி பெஸ்ட்
கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அவர்களுக்கு எல்லாம் முன்னாடியாக நாம் இந்த திட்டத்தை செயல்படுத்தி கொண்டு வருகிறோம் என்பது நமக்கு எல்லாம் பெருமை. மாணவர்கள் நல்லா சாப்பிடுங்கள், நல்லா படிங்கள், வாழ்க்கை நன்றாக இருக்கும். நீங்கள் எங்களுக்கு எல்லாமே. எப்பொழுதும் உங்களுக்காக தான் நாங்கள் இருக்கிறோம். இருப்போம். குழந்தைகளுக்கு ஆல் தி பெஸ்ட்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.