தாக்குதல் நடத்த யாரும் துணியக் கூடாது; அந்த அளவுக்கு கடும் நடவடிக்கை இருக்கும்: அமித்ஷா
தாக்குதல் நடத்த யாரும் துணியக் கூடாது; அந்த அளவுக்கு கடும் நடவடிக்கை இருக்கும்: அமித்ஷா
ADDED : நவ 13, 2025 07:51 PM

புதுடில்லி: டில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு கிடைக்கப் போகும் தண்டனை, இந்தியாவில் மீண்டும் இதுபோன்ற தாக்குதலை யாரும் நடத்தத் துணியக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அமித்ஷா பேசியதாவது: கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் பாலில் 50% உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளை அடைவதை உறுதி செய்யப்படும். இதனால் கால்நடை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை பாஜ அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. டில்லி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு கிடைக்கப் போகும் தண்டனை, இந்தியாவில் மீண்டும் இதுபோன்ற தாக்குதலை யாரும் நடத்தத் துணியக்கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்தும்.
குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை, இந்தியா எந்த வடிவத்திலும் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ளாது என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும். நமது நாட்டிற்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்குவதை உறுதி செய்வதற்கான பிரதமர் மோடியின் உறுதிப்பாடு முழுமையாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

