‛‛காந்தி'' திரைப்படம் எடுக்காவிட்டால் அவரை பற்றி யாருக்கும் தெரியாது : மோடி
‛‛காந்தி'' திரைப்படம் எடுக்காவிட்டால் அவரை பற்றி யாருக்கும் தெரியாது : மோடி
ADDED : மே 29, 2024 10:45 PM

புதுடில்லி: ‛காந்தி ' என்ற திரைப்படம் வெளிவராவிட்டால் அவரை பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, மகாத்மா காந்தி பற்றி 'காந்தி' என்ற திரைப்படம் எடுக்காமல் இருந்திருந்தால் அவரை பற்றி உலகில் யாருக்குமே தெரிந்திருக்காது. 1982-ல் ரிச்சர்ட் அட்டன்பர்க் எடுத்த ‛‛காந்தி'' குறித்த திரைப்படம் வந்த பிறகுதான் அவரைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் உலகில் ஏற்பட்டது.
இந்த 75 ஆண்டுகளில், உலகத்துக்கு மகாத்மா காந்தியை அறிமுகம் செய்வது நமது கடமையல்லவா? மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற உலக தலைவர்களை விட காந்தி குறைந்தவர் அல்ல. இவ்வாறு மோடி கூறினார். காந்தி குறித்து மோடி அளித்துள்ள பேட்டிக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டங்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
ஜெய்ராம் ரமேஷ்:
காந்தியின் பாரம்பரியத்தை மோடி அழிக்கிறார். காந்தியின் தேசியத்தை புரிந்து கொள்ளாததுதான் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களின் அடையாளம். அவர்களின் சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்ட நாதுராம் கோட்சே, காந்தியைக் கொல்ல வழிவகுத்தது.
செல்வப்பெருந்தகை:
காந்தியின் புகழை சீர்குலைக்க வேண்டுமென்று இப்படியொரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் அவரின் வரலாற்றைப் பற்றி பிரதமர் மோடி சிறிதும் அறியவில்லை.