UPDATED : ஜூலை 24, 2024 05:03 PM
ADDED : ஜூலை 24, 2024 01:18 PM

புதுடில்லி: காவிரியில் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கான அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளது. பல கடிதங்களை எழுதி உள்ளது. அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையையும் அளித்து இருந்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன், 2 கடிதங்களை ஜல்சக்தி துறைக்கு அனுப்பி இருந்தது.
இந்நிலையில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ், மேகதாது தொடர்பாக கர்நாடகா அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதா என தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கேள்வி கேட்டு இருந்தார்.
இதற்கு மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் இயங்கும் மத்திய நீர் ஆணையம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், அணை கட்ட அனுமதிக்கும்படி முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் எழுதி உள்ளார். இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டு உள்ளது.