தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிக்க முழு தடையில்லை! 24 மணி நேரமும் வெடிக்க அனுமதிக்க முடியாது சமநிலையான தீர்வு காண கோர்ட் வலியுறுத்தல்
தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிக்க முழு தடையில்லை! 24 மணி நேரமும் வெடிக்க அனுமதிக்க முடியாது சமநிலையான தீர்வு காண கோர்ட் வலியுறுத்தல்
UPDATED : செப் 30, 2026 08:19 PM
ADDED : செப் 30, 2026 08:12 PM

-சிறப்பு நிருபர்-
'தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க முழு தடை விதிக்க முடியாது; அதே சமயம் நாள் முழுதும் பட்டாசுகள் வெடிப்பதற்கும் அனுமதிக்க முடியாது. மக்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வகையில், இப்பிரச்னைக்கு சமநிலையான தீர்வு காணப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுதும் தீபாவளி பண்டிகை வரும் நவ., 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளி நாளில் புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடிப்பது வழக்கம்.
அதே சமயம், ஒரே நாளில் அதிக அளவில் நாடு முழுதும் பட்டாசுகள் வெடிப்பதால், சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த சில ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது.
குறிப்பாக, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், பசுமை பட்டாசுகள் உற்பத்திக்கு பட்டாசு ஆலைகள் மாற வேண்டும், தீபாவளி நாளன்று, பட்டாசுகள் வெடிக்க நேரக் கட்டுப்பாடு என பல்வேறு உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் அவ்வப்போது பிறப்பித்து வருகிறது.
டில்லியில், காற்று மாசுடன் சேர்ந்து பட்டாசு புகையும் பெருமளவு சுற்றுச்சூழலை பாதித்ததால், அங்கு பட்டாசுகள் வெடிக்க ஒரு சில ஆண்டுகளுக்கு முன் முழு தடை விதிக்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு பசுமை பட்டாசுகள் மட்டும் வெடிப்பதற்கு நேர கட்டுப்பாட்டுன் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பட்டாசுகள் வெடிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் வராலே அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி, ''சி.எஸ்.ஐ.ஆர்., நீரி' அமைப்பு பரிந்துரைத்த பேரியம் உப்பு அளவு குறைத்து உருவாக்கப்பட்ட, அடுத்த தலைமுறை பசுமை பட்டாசுகளை வெடிக்க உரிய கட்டுப்பாடுகளுடன் அனுமதி தரலாம்,'' என்றார்.
பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.பரமேஸ்வர், ''நாடு முழுதும் ஒரே சீரான விதிகள் இருக்கும்போது, டில்லியை மட்டும் தேவையின்றி தனிமைப்படுத்தக் கூடாது. காலநிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு நீதிமன்றம் உத்தரவை மாற்றி அமைக்கலாம்,'' என்றார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மக்களின் உணர்வுகள், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு நாங்கள் தெளிவான முடிவை எடுக்கவுள்ளோம். அதன்படி, தீபாவளி நாளன்று, பட்டாசுகள் வெடிப்பதற்கு முழு தடை விதிக்கப் போவதில்லை; அதே சமயம் 24 மணி நேரமும் பட்டாசுகள் வெடிப்பதற்கு நிச்சயம் அனுமதி அளிக்க முடியாது.
நாள் முழுதும் பட்டாசுகள் வெடித்தால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். தவிர, குழந்தைகள், முதியோர், நோயாளிகள் அவதிப்படுவர். முழுதாக தடை விதித்ததால், தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியது போல் ஆகும்.
எனவே, குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஒதுக்கி, பட்டாசுகள் வெடிக்க அனுமதி தருவதற்கான தீர்வை காண வேண்டியுள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மத்திய அரசு முன்வைத்த சரவெடி தயாரிப்புக்கும் நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
பேரியம் கலந்த பட்டாசுகள் தொடர்பான பரிசோதனை மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்., 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
