ADDED : டிச 08, 2025 04:54 AM

மூணாறு: கேரள உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பம் இல்லாததை பதிவு செய்யும் 'நோட்டா' வசதி இல்லை.
தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க விருப்பம் இல்லை என்றால், அதனை பதிவு செய்ய ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் 'நோட்டா' வசதி உள்ளது. ஆனால் கேரளாவில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 'நோட்டா' வசதி பயன்பாட்டில் இல்லை. மாறாக 'எண்ட்' வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு வாக்காளர் ஊராட்சி, ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என மூன்று வேட்பாளர்களுக்கு தங்களது ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும். அதற்கு தனித்தனியாக மூன்று இயந்திரங்கள் வைக்கப்படும். அதில் ஒரு வேட்பாளர் அல்லது இருவருக்கு ஓட்டளித்து விட்டு, அடுத்ததாக ஓட்டளிக்க விருப்பம் இல்லை என்றால் 'எண்ட்' பட்டனை அழுத்தி விட்டு வரலாம். யாருக்கும் ஓட்டளிக்க விருப்பம் இல்லை என்றால், நேரடியாக 'எண்ட்' பட்டனை அழுத்தலாம். நகராட்சி, மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் 'எண்ட்' பட்டன் கிடையாது.
ஆகவே இப்பதிவுகளில் ஓட்டளிக்க விருப்பம் இல்லாதவர்கள் அதிகாரியிடம் கூறி கையெழுத்திட வேண்டும். அதனை பதிவு செய்யும் அதிகாரி விபரங்களை ஓட்டுச் சாவடியில் உள்ள கட்சி முகவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வார். ஆகவே நோட்டாவை நம்பி ஓட்டுச் சாவடிகளுக்கு வாக்காளர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

