கர்நாடகாவில் முதல்வர் பதவி காலியாக இல்லை: சொல்கிறார் சித்தராமையா
கர்நாடகாவில் முதல்வர் பதவி காலியாக இல்லை: சொல்கிறார் சித்தராமையா
ADDED : ஜூலை 10, 2025 05:01 PM

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் மாற்றப்படுவாரா என பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அப்படி ஒரு ஆலோசனை ஏதும் நடக்கவில்லை. மாநிலத்தில் முதல்வர் பதவி ஏதும் காலியாக இல்லை என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
சித்தராமையா, சிவகுமாருக்கு ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று, சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே முன்பு ஒப்பந்தம் போடப்பட்டதாக, சிவகுமார் அணியை சேர்ந்த ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைன் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
இது உண்மையாக இருந்தால், வரும் நவம்பர் மாதம் முதல்வர் பதவியை சித்தராமையா விட்டு கொடுக்க வேண்டும். ஆனால், 'நானே 5 ஆண்டுகளும் முதல்வர்' என்று, அதிரடியாக அறிவித்தார் சித்தராமையா. 'என்னிடம் வேறு என்ன வழி உள்ளது. சித்தராமையாவுக்கு ஆதரவு கொடுத்து தான் ஆக வேண்டும்' என்று முகத்தை பாவமாக வைத்து பேசி, பரிதாபத்தை தேடினார் சிவகுமார்.
முதல்வர் மாற்றம் குறித்து விவாதம் நடந்து வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், டில்லி சென்ற சிவக்குமார், சோனியா, பிரியங்காவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று சோனியா, கார்கே, ராகுல் ஆகியோரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சந்திப்பின் போது, முதல்வர் பதவி கேட்பதுடன், பதவி குறித்து போடப்பட்ட ஒப்பந்தம் பற்றியும், மேலிட தலைவர்களிடம் நினைவுபடுத்துவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், டில்லியில் முதல்வர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது: உங்கள் முன் இருப்பது மகிழ்ச்சி. நான் தான் கர்நாடகாவின் முதல்வர். அந்த பதவியில் இங்கு அமர்ந்துள்ளேன். கர்நாடகாவில் முதல்வர் பதவி காலியாக இல்லை. சிவக்கமாரும் இதனை ஒத்து கொள்வார். கட்சி மேலிடம் எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். ராகுலை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. இவ்வறு அவர் கூறினார்.