மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் தேர்வு
மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் தேர்வு
ADDED : அக் 07, 2024 11:38 PM

ஸ்டாக்ஹோம்: மருத்துவ துறைக்கான நோபல் பரிசு பெறுவதற்கு, அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருவ்குன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும், பல துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. உலகின் மிக உயரிய விருதாக இது கருதப்படுகிறது.
இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் பெறுவோர் குறித்த விபரங்கள் வெளியீடு நேற்று துவங்கியது. அதன்படி, முதலில் மருத்துவத் துறைக்கான விருது பெறுவோர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
மைக்ரோ ஆர்.என்.ஏ.,யைக் கண்டுபிடித்ததுடன், அதன் மரபணு கட்டுப்பாட்டு முக்கியத்துவத்தை கண்டுபிடித்ததற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருவ்குன், இந்தாண்டுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
டி.என்.ஏ., எனப்படும் மரபணு, நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் செயல்பாட்டுக்கான குறியீட்டை வழங்குகிறது. அதே நேரத்தில், ஆர்.என்.ஏ., எனப்படும் ரிபோநியூக்ளிக் ஆசிட், அந்த செல்கள் தங்களுடைய செயல்பாடுகளைச் செய்வதற்கு புரதங்களாக மாற்றுகிறது.
இது, மனித உடல் செயல்பாடு தொடர்பான முக்கியமான ஆய்வாகும். இருவருக்கும், 9.23 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும். வரும் டிச., 10ல் ஆல்பிரட் நோபலின் பிறந்த நாளில் நடக்கும் விழாவில், இந்த விருது வழங்கப்படும்.