''எங்களுக்கு பயமில்லை விரைவில் அறிவிப்போம்'': அமேதி, ரேபரேலி வேட்பாளர் அறிவிப்பு பற்றி காங்., கருத்து
''எங்களுக்கு பயமில்லை விரைவில் அறிவிப்போம்'': அமேதி, ரேபரேலி வேட்பாளர் அறிவிப்பு பற்றி காங்., கருத்து
UPDATED : மே 01, 2024 03:38 PM
ADDED : மே 01, 2024 03:37 PM

புதுடில்லி: அமேதி, ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ''வேட்பாளர்களை அறிவிப்பதில் எங்களுக்கு பயமில்லை, இன்னும் 24 முதல் 30 மணிநேரத்தில் வேட்பாளர்களை அறிவிப்போம்'' என காங்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், நேற்று (ஏப்.,30) புதிய வேட்பாளர்கள் பட்டியலை காங்., மேலிடம் வெளியிட்டது. இதில் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாளை மறுநாள் (மே 3) அந்த தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், யார் காங்., வேட்பாளர்கள் என்பது குறித்து சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
பயமில்லை
இரு தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு பற்றி காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: இன்னும் 24 முதல் 30 மணிநேரத்தில் காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவை அறிவிப்பார். அதற்கு முன்னதாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் போலியானவை. எந்தவித தாமதமும் இல்லை; அப்படியெனில், பா.ஜ.,வும் இதுவரை ரேபரேலி வேட்பாளரை அறிவிக்கவில்லையே! அமேதி தொகுதியில் ஏற்கனவே எம்.பி.,யாக இருப்பதால் ஸ்மிருதி இரானியை அறிவித்தனர். வேட்பாளர்களை அறிவிப்பதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. மே 3ம் தேதி தான் வேட்புமனு தாக்கல் முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ரேபரேலி தொகுதியில் வென்றிருந்த சோனியா, தற்போது ராஜ்யசபா எம்.பி., ஆனதால், அந்த தொகுதியில் சோனியாவின் மகளும், காங்., பொதுச்செயலாளருமான பிரியங்காவை போட்டியிட வைக்க காங்., திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், கடந்த லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் தோல்வியடைந்ததால், அவர் மீண்டும் அங்கு போட்டியிட தயங்குவதாக கூறுகின்றனர்.