திரும்ப வராத சுய உதவிக்குழு கடன்: தமிழகம் முதலிடம்
திரும்ப வராத சுய உதவிக்குழு கடன்: தமிழகம் முதலிடம்
UPDATED : பிப் 11, 2026 12:41 AM
ADDED : பிப் 11, 2026 12:33 AM

புதுடில்லி: நாடு முழுதும் பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களில், வங்கிக்கு திரும்ப செலுத்தப்படாத தொகையில், 1.36 லட்சம் கோடி ரூபாயுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பார்லிமென்ட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதில்: 'நபார்டு' எனப்படும், தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி அளித்த தகவல் அடிப்படையில், 2025 செப்., 30 நிலவரப்படி, நாடு முழுதும் பெண்கள் சுய உதவிக்குழு கடன்களில் கணிசமான அளவு வாராக் கடன்களாக உள்ளது.
அதில், தமிழகம் 1.36 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன்களுடன் முதலிடத்தில் உள்ளது. 61,682 கோடி ரூபாயுடன் தெலுங்கானா இரண்டாமிடம்; 58,246 கோடி ரூபாயுடன் கர்நாடகா மூன்றாமிடம்; 53,106 கோடி ரூபாயுடன் மேற்கு வங்கம் நான்காம் இடம்; 40,763 கோடி ரூபாய் வாராக்கடனுடன் ஆந்திரா ஐந்தாம் இடத்தில் உள்ளது.
கடனை திருப்பிச் செலுத்தும் ஒழுங்கை மேம்படுத்தவும், பெண்கள் சுய உதவிக்குழு கடன் திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படவும், நபார்டு தொடர்ந்து கண் காணித்து வருகிறது. இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.

