sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யமுனை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு டில்லியில் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது

/

யமுனை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு டில்லியில் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது

யமுனை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு டில்லியில் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது

யமுனை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு டில்லியில் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது


ADDED : செப் 05, 2025 01:49 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:டில்லியில் பாயும் யமுனை நதி, 207 மீட்டர் உயரத்தை தாண்டி பாய்வதாலும், கரையோர பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை, 11 - 12 மணி நிலவரப்படி, ஒல்டு ரயில்வே பிரிட்ஜ் பகுதியில் 207.46 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்தது. அதற்கு முன், நேற்று காலை 6:00 - 7:00 மணி வரை 207.48 மீட்டரை வெள்ள நீர் தொட்டது.

நீரின் வெள்ள அளவு, காலை 6:00 மணிக்கு பின், நிலையாகி, 207.47 என்ற அளவிலேயே தொடர்ந்தது.

வெள்ள நீரின் பாதிப்பு, கடந்த ஆண்டை விட சற்று குறைவாகவே இருந்தது. முதல்வர், கேபினட் அமைச்சர்கள் போன்றோரின் வீடுகள் அமைந்துள்ள டில்லி தலைமைச் செயலக கட்டடம் அமைந்துள்ள இடத்தின் அருகே வெள்ள நீர் புகுந்தது.

வசுதேவ் காட் பகுதியில் வெள்ள நீரால் பாதிப்பு ஏற்பட்டது. மயூர் விஹார் பேஸ் 1 மற்றும் சில நிவாரண முகாம்களில் யமுனை நதியின் வெள்ள நீர் புகுந்தது.

மோனாஸ்ட்ரி மார்க்கெட் மற்றும் யமுனை பஜார் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. அதுபோல, காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள ஸ்ரீ மார்க்கெட் வாலி ஹனுமான் பாபா மந்திர் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

பக்தர் ஒருவர் கூறும் போது,'ஒவ்வொரு ஆண்டும் யமுனை நதியில் வெள்ளம் அதிகரித்த வண்ணமாக உள்ளது. கடவுள் அனுமன் சிலையை கூட தண்ணீர் மூழ்க அடிக்கிறது. எனினும், அந்த நீர் புனிதமானது' என்றார்.

நிகாம்போத் காட் என்ற இடத்தில் யமுனை நதியின் வெள்ள நீர் புகுந்தது. அந்த பகுதியில் உள்ள கீதா காலனி மயானம், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. எனினும், அந்த பகுதியில் எவ்வித பாதிப்பும் இன்றி, உடல்கள் தொடர்ந்து எரியூட்டப்பட்டன.

'கடந்த, 2023ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த மயானம் நீரில் மூழ்கியது. இப்போது, 10 அடி உயரத்திற்கு தண்ணீர் நிற்கிறது. பிணங்களை எரிக்க வைத்திருந்த மரப்பொருட்கள் முழுவதும் நனைந்து விட்டன. அரசு தரப்பில் எந்த உதவியும் செய்யப்படவில்லை' என, சஞ்சய் சர்மா என்பவர் கூறினார்.

யமுனை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் கடந்த இரண்டு நாட்களாக இடை விடாமல் பெய்யும் மழையால், டில்லி நகர மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சந்த்தி ராம் அகாடா அருகே சிவில் லைன்ஸ் பகுதியில், வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 'ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், இந்த பகுதியில் நீர் சூழ்ந்து விடுகிறது. இதை சரி செய்ய எந்த அரசும் தயாராக இல்லை' என, அப்பகுதி மக்கள் கூறினர்.

நேற்றைய புள்ளிவிவரப்படி, யமுனை நதியின் கரையோரங்களில் வசித்த 8018 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில், 2020 பேர் நிரந்தர காப்பங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், டில்லி மாநில அரசு தரப்பில், 'பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. 24 மணி நேரமும் அரசு தரப்பில் கண்காணிப்பு செய்யப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு பலத்த மழை மற்றும் யமுனை நதியின் வெள்ளப்பெருக்கு காரணமாக, டில்லியில் நேற்று காலையில், அலுவலகங்களுக்கு சென்றோர் கடும் அவதிக்கு ஆளாகினர். பல இடங்களில் போக்குவரத்து ஆமை வேகத்தில் இயங்கியது. சாலையில் தேங்கி நின்ற தண்ணீரால், ஏராளமான வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. குறிப்பாக, காஷ்மீர் கேட், ரிங் ரோடு, அவுட்டர் ரிங் ரோடு மற்றும் கலிந்தி குஞ்ச் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறித்து போலீசார் கூறும் போது, 'யமுனை நதிக்கரையோரங்களில் தான், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த பகுதிகளை தவிர்க்குமாறு, கேட்டுக் கொண்டோம்' என்றனர். சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்கள், இத்தகைய அழைப்பை செய்திருந்தனர். குறிப்பாக, சாந்த் கிராம் அகாராவிலிருந்து ராஜ்காட் செல்லும் வழிகளில், வழக்கமான வழிகளில் செல்லாமல், மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளை, போலீசார் கேட்டுக் கொண்டனர். அதுபோல, டில்லி மெட்ரோ ரயில்களை பயன்படுத்துமாறும், வாகன ஓட்டிகளை போலீசார் கேட்டுக் கொண்டனர். வழக்கமாக சில நிமிடங்களில் கடக்கக் கூடிய வழிகளை நேற்று கடக்க, பல மணி நேரம் பிடித்தது என வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்தனர். நேற்று காலையில் சிலர், ஆங்காங்கே கார்களை நிறுத்தி விட்டு, மெட்ரோ ரயில்களை பிடித்து, அலுவலகம் சென்றனர். யமுனை நதியின் கரையோரங்களில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் மாநில பொதுப்பணித்துறையினர், மண்ணை கொட்டி, சீரமைத்தனர்.



மீட்பு பணியில் மீட்பு படையினர் டில்லியில் ஓடும் யமுனை நதியால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள டில்லி மக்களை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் காப்பாற்றியுள்ளனர். பல இடங்களில், நிவாரண முகாம்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, யமுனா பஜார் மற்றும் மயூர் விஹார் பேஸ் 1 ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் நீர் தேங்கியதால், பாதிப்படைந்தனர். அவர்களை தங்க வைக்கும் நிவாரண முகாம்களையும் வெள்ள நீர் சூழ்ந்ததால், அவதி அடைந்தனர். மேலும், வெள்ள நீரால் அவதிப்படுபவர்களை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டனர். அவர்கள் உயரமான டிராக்டர்கள் வாயிலாக, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அதுபோல, டில்லியின் பல பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் வாகனங்களுடன் ஈடுபட்டனர்.



மழை நீரில் நனைந்த புத்தகங்கள் தொடர்ந்து பெய்யும் மழை மற்றும் யமுனை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், தங்கள் வீடுகளில் வைத்திருந்த பள்ளி மாணவியரின் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் நனைந்து விட்டன. அவற்றை காய வைத்துள்ள மாணவியர், 'எங்களுக்கு யார் மீண்டும் புத்தகங்களை தருவர்' என கேள்வி எழுப்பினர். நேற்று மதியம், 2 மணி நிலவரப்படி, யமுனை நதியில் 207.445 மீட்டர் அளவுக்கு வெள்ள நீர் பாய்ந்தது. இதனால், கரையோரங்களில் வசித்தவர்கள், கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர். இதற்கிடையே, தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், யமுனை நதியின் வெள்ளப் பெருக்காலும், பல வீடுகளில் பள்ளிக்குழந்தைகளின் பள்ளி புத்தகங்கள் நனைந்து விட்டன. அவற்றை பாதுகாக்க, மாணவியர் பெரும்பாடு பட்டனர்.








      Dinamalar
      Follow us