தொடர் மழையால் பெங்களூரில் இயல்பு வாழ்க்கை.... பாதிப்பு! 2வது நாளாக நகரில் வாகன ஓட்டிகள் திணறல்
தொடர் மழையால் பெங்களூரில் இயல்பு வாழ்க்கை.... பாதிப்பு! 2வது நாளாக நகரில் வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : அக் 16, 2024 07:37 AM

பெங்களூரு: கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. இரண்டாவது நாளாக தொடர்ந்து பெய்த கனமழையால், பெங்களூரில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் திணறினர். குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை முடிந்து, தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. பெங்களூரு நகரில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரண்டாவது நாளாக மழை பெய்தது.
புட்டேனஹள்ளி, ஜரகணஹள்ளி, பீன்யா, செட்டிஹள்ளி, பானஸ்வாடி, மாருதி சேவா நகர், புலிகேசி நகர், ராமசாமி பாளையா, எஸ்.கே., கார்டன், பாரதி நகர், ஹலசூரு, ஜெயமஹால், சம்பங்கி ராம் நகர், சிவாஜி நகர், எச்.ஏ. எல்., ஏர்போர்ட், விஜினாபுரா.
மாரத்தஹள்ளி, ராமமூர்த்தி நகர், கருடாச்சார்பாலையா, கே.ஆர். புரம், லக்கரே, ஹம்பி நகர், கெங்கேரி, அத்திகுப்பே, விஜயநகர், ராஜாஜி நகர், நாகபுரா, மகாலட்சுமிபுரம், நந்தினி லே - அவுட், எலஹங்கா.
சாம்ராஜ்பேட், விதான் சவுதா, சாந்தி நகர், எலக்ட்ரானிக் சிட்டி, ஹெப்பால், கல்யாண் நகர், காந்திநகர், மல்லேஸ்வரம், பகவேஸ்வரா நகர், மகாதேவபுரா உட்பட நகர் முழுவதும் உள்ள பகுதிகளில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக எலஹங்கா மண்டலத்தில் சவுடேஸ்வரி என்ற இடத்தில் 7.35 செ.மீ., மழை பதிவானது.
நடுவழியில் நின்றன
இதனால் நகரின் உள்ள அனைத்து சாலைகளிலும், குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. 3 அடி முதல் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஓக்லிபுரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீருடன், சாக்கடை கால்வாய் நீரும் சேர்ந்து கலந்து துர்நாற்றம் வீசியது. அங்கும் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால், வாகனங்கள் தகிடுதத்தம் போட்டபடி தள்ளாடி சென்றன.
பைக், ஆட்டோக்களின் சைலன்சர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பைக், ஆட்டோக்கள் நடுவழியில் நின்றன. வாகன ஓட்டிகள் முட்டி அளவுக்கு தேங்கி நின்ற தண்ணீரில் கஷ்டப்பட்டு வாகனங்களை தள்ளியபடி சென்றனர்.
நகரவாசிகள் பீதி
விமான நிலைய சாலையில் ஹெப்பால் மேம்பாலம் அருகே உள்ள இணைப்பு சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. 2 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதில், ஒரு ஆம்புலன்சும் சிக்கி கொண்டது. ஒருவழியாக போக்குவரத்து போலீசார், நெரிசலை சரி செய்து ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால், மக்கள் கடும் அவதி அடைந்தனர். பல இடங்களில் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. முதல் இரு நாள் பெய்த மழைக்கே இந்த நிலைமை என்றால், வரும் நாட்களில் பெய்யும் மழையால் என்ன நிலைமைக்கு ஆளாக போகிறோமோ என, பெங்களூரு நகரவாசிகள் பீதி அடைந்து உள்ளனர்.
பள்ளி, கல்லுாரி விடுமுறை
இன்றும் பெங்களூரு நகரில் பரவலான மழை அல்லது கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், பெங்களூரு நகரில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரை தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் ஏழு நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பெங்களூரு ரூரல், சிக்கபல்லாபூர், சிக்கமகளூரு, ஹாசன், கோலார், மாண்டியா, ராம்நகர், துமகூரு, தட்சிண கன்னடா, உடுப்பி, பல்லாரி, சாம்ராஜ் நகர், சித்ரதுர்கா, குடகு, மைசூரு, விஜயநகரா ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
பெங்களூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை கேட்க, மாநகராட்சி உதவி எண்களை வெளியிட்டு உள்ளது. 1533 என்ற ஹெல்ப் லைன் நம்பருக்கு அழைக்கலாம். 08022660000/ 08022975595/ 08022221188 என்ற நம்பரை அழைக்கலாம். வாட்ஸாப் நம்பர் 9480685700.
மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டலத்தில் வசிப்பவர்கள் 9480685702 என்ற மொபைல் நம்பருக்கும், 080- 22975803 என்ற லேண்ட்லைன் நம்பருக்கும் அழைப்பு விடுக்கலாம்.
மேற்கு மண்டலத்தில் வசிப்பவர்கள் 9480685703/ 08023561692/ 08023463366 என்ற நம்பருக்கு அழைக்கலாம்.
தெற்கு மண்டலத்தில் வசிப்பவர்கள் 9480685704/ 08026566362/ 08022975703 என்ற நம்பருக்கு அழைக்கலாம்.
மகாதேவபுரா மண்டலத்தில் வசிப்பவர்கள் 9480685706/ 08028512300 என்ற நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்.
பொம்மனஹள்ளி மண்டலத்தில் வசிப்பவர்கள் 9480685707/ 08025735642/ 08025732447 என்ற நம்பருக்கு அழைக்கலாம்.
எலகங்கா மண்டலத்தில் வசிப்பவர்கள் 9480685705/ 7022664419/ 08023636671/ 08022975936 என்ற நம்பருக்கு அழைக்கலாம்.
ஆர்.ஆர்., மண்டலத்தில் வசிப்பவர்கள் 9480685708/ 08028601851 என்ற நம்பரை அழைக்கலாம்.
தாசரஹள்ளி மண்டலத்தில் வசிப்பவர்கள் 9480685709/ 08028394909 என்ற நம்பருக்கு அழைக்கலாம்.
பெங்களூரு விதான் சவுதா பின்பக்கம் உள்ள கோல்ப் மைதானம் சாலையில், அமைச்சர்களின் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்புக்கு முன்பு செல்லும் சாலையிலும் மழைநீர் 3 அடிக்கு மேல் தேங்கி நின்றது.
கனமழை காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கியதால், மெஜஸ்டிக் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி., -மற்றும் பி.எம்.டி.சி., பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.