அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு பயப்பட மாட்டோம்: கார்கே
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு பயப்பட மாட்டோம்: கார்கே
ADDED : ஏப் 19, 2025 09:03 PM

புதுடில்லி: '' சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கையை கண்டு பயப்பட மாட்டோம்,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
காங்கிரஸ்,பொதுச்செயலாளர்கள், மேலிட பொறுப்பாளர்கள், கட்சி அமைப்புகளின் நிர்வாகிகளுடன் டில்லியின் இந்திரா பவனில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கார்கே பேசியதாவது: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் சோனியா, ராகுல் பெயர் இடம்பெற்றுள்ளதும், நேஷனல் ஹெரால்டு சொத்துகள் முடக்கப்பட்டதும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திற்கு பிறகு, உடனடியாக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது தற்செயல் நடவடிக்கை அல்ல. இதனை பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம்.
வக்ப் சட்டத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் காங்கிரஸ் ஒருங்கிணைத்தது. இண்டி கூட்டணி கட்சிகள் அனைத்தும் நம்மை ஆதரித்தன. காங்கிரஸ், மற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் வக்ப் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் அளித்துள்ளது. வக்ப் சொத்துகளில் சர்ச்சை ஏற்படுத்தவே அதில் சில சர்ச்சைகள் சேர்க்கப்பட்டு உள்ளன.
வக்ப் குறித்து வதந்தி பரப்பப்படுவதற்கு தேவையான அனைத்து வாய்ப்புகளையும் மத்திய அரசு மற்றும் பா.ஜ., தலைவர்கள் பயன்படுத்தி கொண்டனர். பா.ஜ.,வின் சதியை நாம் தான் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். இவ்வாறு கார்கே பேசினார்.