ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கப்போவது இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு
ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கப்போவது இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு
ADDED : ஜன 10, 2024 04:32 PM

புதுடில்லி: ஜன.,22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், அதில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் திறப்பு விழா வரும் 22ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு தரப்பினருக்கும் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
ஆனால் விழாவில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்., வெளியிட்ட அறிக்கையில், கட்டி முடிக்கப்படாத கோயிலை தேர்தலுக்காக பா.ஜ., திறக்கிறது. மதம் என்பது தனிப்பட்ட விஷயம், அதனை பா.ஜ.,வும் ஆர்.எஸ்.எஸ்.,ம் அரசியல் புராஜெக்ட் ஆக்கியுள்ளார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

