கற்பனையல்ல; நிஜத்தை எழுதினார் தனுஜா குமாரி; நேரில் வாழ்த்தினார் கவர்னர்!
கற்பனையல்ல; நிஜத்தை எழுதினார் தனுஜா குமாரி; நேரில் வாழ்த்தினார் கவர்னர்!
ADDED : ஆக 24, 2024 09:16 AM

திருவனந்தபுரம்: தூய்மைப் பணியாளர் தனுஜா குமாரியின் வாழ்க்கை வரலாறு, கேரளாவில் கல்லூரி மாணவிகளின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தூய்மைப் பணியாளர்
திருவனந்தபுரத்தில் உள்ள அம்பலமுக்கு பகுதியில் சாலைகளில் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுபவர் தூய்மை பணியாளர் தனுஜா குமாரி,48. செங்கல்சூலா எனும் பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வரும் இவர் 9ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டார். பின்னர், இளம் வயதிலேயே திருமணம் செய்து தனுஜா, வறுமை பிடியில் தவித்து வந்தார்.
எழுத்தாளர்
வாழ்க்கையில் தான் சந்தித்த வறுமை மற்றும் சமூக பாகுபாடு உள்ளிட்டவையின் தூண்டுதலால், சுயசரிதை புத்தகத்தை எழுதத் தொடங்கினார். தனது 38வது வயதில் 'செங்கல்சூலயிலே என்டே ஜீவிதம்' எனும் முதல் புத்தகத்தை வெளியிட்டார். தனது சமூக மக்களுக்காக போலீஸ் ஸ்டேஷனில் கொடுப்பதற்காக மனுக்களை எழுதத் தொடங்கியதே, இவருக்கு புத்தகம் வெளியிடுவதற்கான அடிப்படையாக அமைந்துள்ளது.
அது என் வாழ்க்கை
'நான் கற்பனை கதைகளை எழுதும் எழுத்தாளர் அல்ல. செங்கல்சூலாவில் என் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை எழுதியுள்ளேன். இதை நான் ஒரு புத்தகமாக பார்க்கவில்லை. அது என் வாழ்க்கை,' என்று தனுஜா குமாரி தெரிவித்துள்ளார்.
அங்கீகாரம்
தனுஜா குமாரியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத்திற்கு கண்ணூர் பல்கலை மற்றும் கோழிக்கோடு பல்கலைக்கழகம் அங்கீகாரம் கொடுத்துள்ளன. பி.ஏ., பட்டப்படிப்புக்கான பாடத்திட்டத்தில், அவரது புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வாழ்க்கை குறிப்புகள், இடம்பெறச் செய்துள்ளது. இது அவருக்கு கிடைத்துள்ள கவுரவமாக பார்க்கப்படுகிறது.
கவுரவம்
இதனிடையே, கடந்த சுதந்திர தினத்தின் போது, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், தனுஜா குமாரியை ராஜ்பவனுக்கு நேரில் அழைத்து கவுரவித்துள்ளார்.

