பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கில் காலமானார்
பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கில் காலமானார்
ADDED : ஜன 09, 2026 02:18 AM

புனே: உலக புகழ்பெற்ற சுற்றுச்சூழல் நிபுணரும், மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாவலருமான மாதவ் காட்கில், உடல்நலக் குறைவால் மஹாராஷ்டிராவில் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 83.
ஆய்வு மையம் நம் நாட்டின் இயற்கை அதிசயங்களில் ஒன்று மேற்கு தொடர்ச்சி மலை. பல இயற்கை வளங்களை வைத்துள்ள இந்த மலையை பாதுகாத்ததில் முக்கிய பங்காற்றியவர், பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கில்.
மஹாராஷ்டிராவின் புனேவில் வசித்து வந்த இவர், உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். இங்கு, 1942ல் பிறந்த மாதவ் காட்கில், புனே பல்கலையில் உயிரியல் பட்டமும், மும்பை பல்கலையில் விலங்கியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றார்.
பின், அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலையில் கணிதத்தில் பிஹெச்.டி., ஆய்வாளர் பட்டம் பெற்றார். கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் 1973 - 2004 வரை பணியாற்றிய இவர், சூழலியலை அறிவியல்பூர்வமாக அணுகி, அதற்கான ஆய்வு மையத்தையும் நிறுவினார்.
நம் நாட்டில் நவீன சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளத்தை காட்கில் அமைத்தார். மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு அமைத்த நிபுணர்கள் குழுவின் தலைவராக பொறுப்பு வகித்த காட்கில், சமூக அக்கறையுடன் கூடிய அறிக்கையை வழங்கினார்.
எதிர்ப்பு அவர், 2011ல் சமர்ப்பித்த அறிக்கை நாடு முழுதும் பெரும் விவாதத்தை எழுப்பியது.
மொத்தம் 1.27 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்க அரசுக்கு அவர் பரிந்துரைத்தார். அபிவிருத்தி என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுவதை தடுத்து, உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என காட்கில் வலியுறுத்தினார்.
இருப்பினும், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா அரசு இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக இருப்பதால், காட்கில் அறிக்கை ஓரங்கட்டப்பட்டது.
சுற் றுச்சூழல் துறையின் முன்னோடியான காட்கிலுக்கு, பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற உயரிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. 2024ல், சூழலியல் உலகின் மிக உயரிய கவுரமான, ஐ.நா.,வின் 'சாம்பியன் ஆப் தி எர்த்' என்ற விருதையும் காட் கில் பெற்றுள்ளார்.

