'டயாலிசிஸ்' இயந்திர வழக்கு தமிழக அரசுக்கு நோட்டீஸ்
'டயாலிசிஸ்' இயந்திர வழக்கு தமிழக அரசுக்கு நோட்டீஸ்
ADDED : ஜூலை 16, 2025 09:45 PM
தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில், 'டயாலிசிஸ்' இயந்திரங்களை இயக்க நிரந்தர பணியாளர்களை நியமிக்க கோரிய மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதன் விபரம்:
உலக மக்கள் தொகையில், 10 சதவீதம் பேர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கு, 'டயாலிசிஸ்' சிகிச்சை அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. இதற்காக, தமிழகம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், 2,050 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் இந்த இயந்திரங்களை இயக்க பல இடங்களில் 'டெக்னீஷியன்கள்' இல்லை.
பெரும்பாலான மருத்துவமனைகளில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே, இந்த டயாலிசிஸ் இயந்திரங்களை இயக்க நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீது பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், வழக்கை ஒத்தி வைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -