போதை பொருள் பறிமுதல் வழக்கு புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு
போதை பொருள் பறிமுதல் வழக்கு புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு
ADDED : டிச 29, 2024 05:18 AM
பெங்களூரு: 'போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட 48 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்' என்று மாநில டி.ஜி.பி., அலோக் மோகன் அறிவித்துள்ளார்.
பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும் போதைப்பொருள் கடத்தலில் பல ஆப்ரிக்கர்கள் ஈடுபட்டு உள்ளனர். இது சம்பந்தமாக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகின்றன. போதைப்பொருட்கள் சமூகத்தில் புரையோடி உள்ளன.
அறிக்கை
போதைப்பொருள் சோதனை, கைதின் போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாக, மாநில போலீஸ் டி.ஜி.பி., அலோக் மோகனுக்கு பல புகார்கள் சென்றுள்ளன.
இதையடுத்து, போலீசாருக்கு சில விதிமுறைகளை வகுத்து அலோக் மோகன் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதன் விபரம்:
போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட 48 மணி நேரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த அறிக்கையுடன் குற்றம் தொடர்பான புகைப்படம், வீடியோ ஆதாரங்கள் இணைப்பது அவசியம்.
ரெய்டுக்கு செல்லும் போலீஸ் அதிகாரிகள், கைத்துப்பாக்கியை கொண்டு செல்ல வேண்டும். போதைப்பொருட்கள் கிடைத்த 72 மணி நேரத்திற்குள், எழுத்து பூர்வமாக, உயர் அதிகாரியிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும். போதைப் பொருட்கள் இருப்பதாக வரும் தகவல்கள் கிடைத்தது எப்படி; எங்கு உள்ளது என்ற தகவலை டைரியில் குறிப்பிட வேண்டும்.
அத்தாட்சி கடிதம்
ரெய்டு நடத்தும் இடத்தில், உரியவர்களிடம் சோதனை நடத்துவதற்கான அத்தாட்சி கடிதத்தை காண்பிக்க வேண்டும். சோதனை நடத்தப்பட்ட இடத்தில், போதைப் பொருள் இருந்ததா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவை அனைத்தும், ஆடியோ, வீடியோவாக பதிவு செய்து, சாட்சியிடம் கையெழுத்து பெற வேண்டும்.
சம்பந்தப்பட்டவரின் மொபைல் போன் டேட்டா மற்றும் இதர ஆதாரங்களை ஆய்வு செய்ய வேண்டும். ரெய்டு முடிந்த 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட போலீஸ் எஸ்.பி.,யிடம் முழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை, நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் வரை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரி பாதுகாக்க வேண்டும். விசாரணை முடிந்த பின், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளை, போலீசார் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதை பின்பற்றுவதால், கைது செய்யப்பட்ட நபரை விடுவிக்கும்படி கூறும் அதிகாரம் மிக்கவர்களின் அழுத்தத்திற்கு ஆளாகாமல் தவிர்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

