இனி துாய் மை லட்டுதான் ! திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
இனி துாய் மை லட்டுதான் ! திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
ADDED : செப் 22, 2024 01:20 AM

திருப்பதி: 'திருப்பதியில் வழங்கப்படும் லட்டுக்களின் புனிதத்தன்மை மீட்கப்பட்டுள்ளது. தற்போது கலப்படமில்லாத, துாய்மையான பிரசாதம் வழங்கப்படுகிறது' என, டி.டி.டி., எனப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவின் திருமலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஏழுமலையான் கோவில். இதை, டி.டி.டி., எனப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.
இங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு அடங்கிய தரமில்லாத நெய் பயன்படுத்தப்பட்டதாக, தெலுங்கு தேசத்தின் தலைவரும், முதல்வருமான சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார்.
முந்தைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில் இந்த முறைகேடு நடந்ததாக அவர் கூறியிருந்தார்.
துாய்மைத்தன்மை
இதற்கிடையே, குஜராத்தில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளை வெளியிட்டு, இந்த மோசடி நடந்ததை, டி.டி.டி., உறுதி செய்திருந்தது. இது நாடு முழுதும் பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேவஸ்தானம் சார்பில், சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவிலில் வழங்கப்படும் ஸ்ரீவாரி லட்டு பிரசாதத்தின் புனிதத்தன்மை, துாய்மைத்தன்மை மீட்கப்பட்டுள்ளது.
அனைத்து பக்தர்களுக்கும் திருப்தி அளிக்கும் வகையில், புனிதமிக்க லட்டு பிரசாதம், கலப்படமில்லாத, தரமான பொருட்களில் தயாரிக்கப்படுவதை தேவஸ்தானம் உறுதி செய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:
திருப்பதி உட்பட நாடு முழுதும் உள்ள கோவில்கள் உள்ளிட்டவற்றில் வழங்கப்படும் பிரசாதம், உணவுப் பொருட்கள் தரமானவை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு அந்த இடங்களில், பரிசோதனை அமைப்புகளை உருவாக்க வேண்டும். இதை, உணவு தரக் கட்டுப்பாட்டு அமைப்பான, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உறுதி செய்ய வேண்டும்.
பரிசோதனை
இதுபோன்ற பரிசோதனை இயந்திரங்களை அமைப்பதற்கு பெரிய அளவில் செலவாகாது.
அதே நேரத்தில் தரம் உறுதி செய்யப்படும். பிரசாதம் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் கொள்முதலில் இருந்து, வினியோகிக்கப்படும் வரை, இந்த சோதனைகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், லட்டுவில் கலப்பட நெய் சேர்க்கப்பட்ட விவகாரத்தில், பண்டிதர்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது, ைஹதராபாத் போலீசில், வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துஉள்ளார்.