ஆபாச வீடியோ வழக்கு: பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு சம்மன்
ஆபாச வீடியோ வழக்கு: பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு சம்மன்
UPDATED : மே 01, 2024 10:48 AM
ADDED : மே 01, 2024 09:32 AM

பெங்களூரு: ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ம.ஜ.த.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கும், அவரது தந்தை எச்டி ரேவண்ணாவுக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். சில பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருப்பதாக கூறப்படும், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணை குழுவை கர்நாடக அரசு நியமித்துள்ளது.
விசாரணை அதிகாரியாக சி.ஐ.டி., - ஏ.டி.ஜி.பி., பிரிஜேஷ்குமார் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமன் பன்னேகர், சீமா லட்கர் மேற்பார்வையில் விசாரணை நடக்கிறது. இந்த குழுவில் எஸ்.பி., உட்பட 18 போலீசார் இடம் பெற்று உள்ளனர்.பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களிடம் சீமா லட்கர் விசாரணை நடத்தி தகவல் பெற்று கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை 3 நாட்களுக்குள் தாக்கல் செய்யும்படி கர்நாடக அரசுக்கு தேசிய பெண்கள் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. பிரச்னை பெரிதானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மஜத.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்டி ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.