ஒடிசாவில் பாஜ பிரமுகர் சுட்டுக்கொலை; பைக்கில் தப்பிய மர்ம நபர்களை தேடும் போலீஸ்
ஒடிசாவில் பாஜ பிரமுகர் சுட்டுக்கொலை; பைக்கில் தப்பிய மர்ம நபர்களை தேடும் போலீஸ்
ADDED : அக் 07, 2025 11:07 AM

கட்டாக்: ஒடிசாவில், பாஜ பிரமுகர் பிடாபஸ் பண்டா என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஒடிசாவில் பாஜ உள்ளூர் பிரமுகராகவும், வக்கீலாகவும் இருப்பவர் பிடாபஸ் பண்டா. பார் கவுன்சிலில் உறுப்பினராக உள்ளார். பேர்ஹம்பூர் மாவட்டம், பிரம்ம நகரில் அவரது வீடு உள்ளது.
இந் நிலையில் அவரது வீடு முன்பு இரண்டு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் பிடாபஸ் பண்டாவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.படுகாயம் அடைந்த அவரை, அங்குள்ளோர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
பிடாபஸ் பண்டா கொல்லப்பட்ட தகவல் வெளியானதை அடுத்து, பேர்ஹம்பூரில் பதற்றம் எழுந்தது. போலீஸ் மூத்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். விசாரணையை தொடங்கி உள்ள அவர்கள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.
படுகொலைக்கான காரணம் என்ன என்பது முழு விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என்று தெரிவித்துள்ள போலீசார், தப்பியோடியவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன என்றும் கூறினர்.
பிடாபஸ் பண்டா கொலையை அறிந்த ஒடிசா பாஜ மாநில தலைவர் மன்மோகன் சமால், உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் கோகுலானந்தா மல்லிக், பாஜ ஒருங்கிணைப்பு செயலாளர் மனாஸ் மொகந்தி உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும், மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு பார் கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.