தீ வைக்கப்பட்டதாக கூறப்படும் ஒடிஷா சிறுமி பலி; தந்தை திடீர் பல்டி
தீ வைக்கப்பட்டதாக கூறப்படும் ஒடிஷா சிறுமி பலி; தந்தை திடீர் பல்டி
ADDED : ஆக 03, 2025 11:57 PM
புவனேஸ்வர்: மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டதாக கூறப்படும் ஒடிஷாவைச் சேர்ந்த, 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனால், தற்கொலை செய்ததாக சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.
ஒடிஷாவின் புரி மாவட்டத்தில் உள்ள பலங்கா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த ஜூலை 19ல் தோழி வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் சிறுமியை வழிமறித்து மண்ணெண்ணெயை ஊற்றி, தீ வைத்து எரித்து விட்டு தப்பியதாக கூறப்பட்டது.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த சிறுமி, முதலில் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை மோசமானதை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக விமானம் வாயிலாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சிறுமி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், 'சிறுமி மீது யாரும் தீ வைக்கவில்லை; மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்' என, தெரிவித்தனர்.
எனவே சிறுமி உயிரிழந்தது தொடர்பாக உணர்ச்சிபூர்வமான கருத்துக்களை யாரும் வெளியிட வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தன் மகள் தீ வைத்து கொல்லப்பட்டதாக அச்சிறுமியின் தந்தை கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், 'என் மகள் மன அழுத்தம் காரணமாக தீக்குளித்து இறந்து விட்டார். அவரது உயிரிழப்பில் யாருக்கும் தொடர்பில்லை. இந்த துயர சம்பவத்தை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம்' என, சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.