காதலி மீதான கடுப்பில் ரயிலை கவிழ்க்க சதி: தண்டவாளத்தில் இருமுறை மரக்கட்டை வைத்த ஒடிசா வாலிபர்
காதலி மீதான கடுப்பில் ரயிலை கவிழ்க்க சதி: தண்டவாளத்தில் இருமுறை மரக்கட்டை வைத்த ஒடிசா வாலிபர்
ADDED : மே 04, 2025 02:00 AM

பாலக்காடு:பாலக்காடு, மலம்புழா அருகே, காதலியுடன் ஏற்பட்ட பிரச்னைக்காக தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற, ஒடிசா வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாக்குவாதம்
ஒடிசா மாநிலம், பெல்லி பக்கேரியை சேர்ந்தவர் பினோத்மல்லிக், 23. இவர், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா ரயில் பாதை அருகே உள்ள 'கிரஷர்' நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவர், நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு, ஒடிசாவில் உள்ள காதலியுடன் மொபைல்போனில் பேசிய போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மது போதையில் இருந்த அவர், உடைந்த கண்ணாடி பாட்டிலால், உடல் முழுதும் தனக்கு தானே கீறி காயம் ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின், தன் காதலி மீதான ஆத்திரத்தில், அவ்வழியாக வரும் ரயிலை கவிழ்க்க முடிவெடுத்தார்.
இதற்காக, அப்பகுதியில் இருந்த பெரிய மரக்கட்டையை துாக்கி வந்து தண்டவாளத்தில் வைத்துள்ளார். பின், அதில் ரயில் மோதுகிறதா என, துாரத்தில் நின்று வேடிக்கை பார்த்துள்ளார்.
ஆனால், யானை நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், இந்த பகுதியில் செல்லும் ரயில்கள் நிதானமாகவும், அதிக கவனத்துடனும் தான் செல்லும்.
இந்த வகையில், அதிகாலை, 2:40 மணிக்கு அவ்வழியாக சென்ற விவேக் எக்ஸ்பிரசின் லோகோ பைலட், தண்டவாளத்தில் மரக்கட்டை இருப்பதை பார்த்து ரயிலை நிறுத்தினார்.
அவர் ஸ்டேஷன் மாஸ்டரிடம் தகவல் தெரிவித்தார்.
ரயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன், மரக்கட்டை அகற்றப்பட்டதும் ரயில் இயக்கப்பட்டது. இதை மறைந்திருந்து கவனித்த பினோத்மல்லிக், அந்த மரக்கட்டையை மீண்டும் தண்டவாளத்தில் வைத்துள்ளார்.
அகற்றம்
அதிகாலை, 3:00 மணிக்கு சென்ற சரக்கு ரயிலின் லோகோ பைலட்டும் மரக்கட்டை இருப்பதை கண்டு, ரயிலை நிறுத்தி, ஸ்டேஷன் மாஸ்டரிடம் தெரிவித்தார்.
தண்டவாளத்தில் இருந்த மரக்கட்டையை அகற்றிய பின், அந்த சரக்கு ரயிலும் கிளம்பியது.
இனி வேலைக்கு ஆகாது என்றும், போதை இறங்கியதாலும் பினோத்மல்லிக் அங்கிருந்து கிளம்பினார்.
ஆனாலும், தொடர்ந்து இருமுறை மரக்கட்டை வைக்கப்பட்டதால், இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்த ரயில்வே உயர் அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை புலனாய்வு அதிகாரிகள், மலம்புழா போலீசார், அருகில் இருந்த 'கிரஷர்' நிறுவனத்தில் விசாரணையை துவக்கினர்.
இதில், பினோத்மல்லிக் சிக்கினார். தன் காதலியுடன் ஏற்பட்ட பிரச்னைக்காக, ரயிலை கவிழ்க்க இப்படி செய்ததாக அவர் தெரிவித்ததும், கடுப்பான போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.