இயற்கை சாண எரிவாயு தயாரிப்போருக்கு மத்திய அரசு சலுகை!: உற்பத்தி செய்வதை முற்றிலும் வாங்குவதாக அறிவிப்பு
இயற்கை சாண எரிவாயு தயாரிப்போருக்கு மத்திய அரசு சலுகை!: உற்பத்தி செய்வதை முற்றிலும் வாங்குவதாக அறிவிப்பு
UPDATED : செப் 20, 2026 08:58 PM
ADDED : செப் 20, 2026 08:32 PM

நிர்ணயிக்கும் விலை 10 ஆண்டுக்கு அமல்படுத்த முடிவு
புதுடில்லி: 'கோபர்தன்' திட்டத்துக்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ள மத்திய அரசு, இயற்கை சாண எரிவாயு தயாரிப்போருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம், உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் எரிவாயுவில், 100 சதவீதம் வரை விற்பனை உத்தரவாதத்தை பெற முடியும். இதற்காக அரசு நிர்ணயிக்கும் விலை குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் அமலில் இருக்கும்.
கடந்த 2018ல், 'துாய்மை இந்தியா' இயக்கத்தின் ஒரு பகுதியாக, 'கோபர்தன்' எனப்படும், தேசிய சுழற்சி உயிரி ஆற்றல் திட்டம் தொடங்கப்பட்டது. மாட்டு சாணம், வேளாண் பயிர்க் கழிவுகள், சமையலறை மற்றும் சந்தை கழிவுகள் போன்றவற்றை சேகரித்து, அவற்றை சி.பி.ஜி., எனப்படும், அழுத்தப்பட்ட சாண எரிவாயுவாகவும், இயற்கை உரமாகவும் மாற்றுவதே இந்த திட்டம்.
சி.பி.ஜி., உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக, 23 ஆயிரத்து 731 கோடி ரூபாய் மதிப்பிலான கோபர்தன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. உள்நாட்டு சி.பி.ஜி., உற்பத்தியை, 10 மடங்கு அதிகரிப்பதையும், இந்த துறையில் அதிக தனியார் முதலீட்டை ஈர்க்கவும் முடிவு செய்துள்ள மத்திய அரசு, கோபர்தன் திட்டத்துக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்தும், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட விதிமுறைகள்:
கோபர்தன் திட்டம், நடப்பு நிதியாண்டு தொடங்கி, 2035 - 36 வரை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் புதிய ஆலை அமைக்கும் போது, ஆலையின் உற்பத்தித் திறனை பொறுத்து, ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு டன்னிற்கு, 2 கோடி ரூபாய் வரை அரசு நேரடி மூலதன நிதியுதவி வழங்கும். இந்த மானியம் ஆலைக்கு மட்டுமின்றி, கிராமங்களில் இருந்து சாணங்களை ஏற்றி வரும் டிராக்டர்கள், கழிவுகளை கொட்டும் கருவிகள் போன்றவற்றிற்கும் பொருந்தும்.
புதிய விதிகளின்படி, சி.பி.ஜி.,யின், 100 சதவீதம் வரை உறுதியான கொள்முதலை தகுதியுள்ள உற்பத்தியாளர்கள் தேர்வு செய்யலாம். இதன்படி, உற்பத்தியாகும் எரிவாயுவை முற்றிலும் அரசே வாங்கி கொள்ளும். உற்பத்தி செய்யும் எரிவாயுவை நகர எரிவாயு வினியோக நிறுவனங்கள், கட்டாயம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
இதற்கான ஒப்பந்தத்தை உரிய காலத்துக்குள் மேற்கொள்ளாத நகர எரிவாயு வினியோக நிறுவனங்களுக்கு எதிராக எரிவாயு ஒதுக்கீட்டை மறுசீரமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வாகனங்களில் பயன்படுத்தப்படும் சி.என்.ஜி., எனப்படும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில், சி.பி.ஜி.,யை கட்டாயம் கலக்க வேண்டும். நடப்பு நிதியாண்டில், 3 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில், 4 சதவீதமாகவும், 2028 - 29ல், 5 சதவீதமாகவும் கலக்க வேண்டும்.
உற்பத்தியாளர்களுக்கு நீண்ட கால வருவாய் பாதுகாப்பை வழங்கும் வகையில், சி.பி.ஜி.,க்கு ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டிற்கு, 2,110 ரூபாய் என்ற நிலையான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 95 சதவீத மீத்தேன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் கிலோவுக்கு, 98 ரூபாய் வழங்கப்படும். இந்த விலை அடுத்த, 10 ஆண்டுகளுக்கு, அதாவது 2036 மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.
ஒவ்வொரு சி.பி.ஜி., திட்டத்துக்கும் அதிகபட்சமாக, 30 கோடி ரூபாய் வரை மூலதன உதவி வழங்கப்படும். புதிய ஆலைகளுக்கு, ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு டன்னுக்கு, 1.25 கோடி ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதியுதவி தவணை முறையில் வழங்கப்படும்.
சி.பி.ஜி.,யை கொள்முதல் செய்து ஒருங்கிணைக்கு ஆப்பரேட்டராக மத்திய அரசுக்கு சொந்தமான, 'கெயில்' நிறுவனம் நியமிக்கப்பட்டு உள்ளது. சி.பி.ஜி., திட்டங்களுக்கு நிதி கிடைப்பதை எளிதாக்க, கடன் உத்தரவாத ஆதரவு, எரிவாயுவை எடுத்துச் செல்ல குழாய் கட்டமைப்பு வசதிகளும் இத்திட்டத்தில் உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
