ADDED : பிப் 26, 2024 07:32 AM
பெங்களூரு: பெங்களூரில் வர்த்தக நிறுவனங்கள் பெயர் பலகையில், 60 சதவீதம் கன்னட மொழி இருக்க வேண்டும் என்ற விதி மீறிய நிறுவன பலகைகளை அடித்து நொறுக்கிய மாநகராட்சி அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
'பெங்களூரில் வர்த்தக நிறுவனங்கள் பெயர் பலகையில், 60 சதவீதம் கன்னட மொழி பயன்படுத்த வேண்டும்' என்று பெங்களூரு மாநகராட்சி கடந்தாண்டு டிசம்பரில் உத்தரவிட்டிருந்தது. பிப்., 28ம் தேதிக்குள் மாற்ற வேண்டும் என எச்சரித்திருந்தது.
இது தொடர்பாக சட்டசபை கூட்டத்தொடரிலும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. வர்த்தக கடைகளின் பெயர் பலகையில், 60 சதவீதம் கன்னடத்தை பயன்படுத்துமாறு அறிவிப்பு செய்ய வேண்டும்.
கடை உரிமையாளர்கள் அறிவுறுத்தல்கள கடைபிடிக்காத பட்சத்தில், பெயர் பலகைகயை துணியால் மூடவும் அல்லது வெள்ளை பெயின்ட் பூசி மூடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பெயர் பலகையை எந்த விதத்திலும் உடைக்கவோ, சேதப்படுத்தவோ நோட்டீஸ் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், 'கெடு' நாள் முடியும் முன்னரே, நகரின் பல இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள், ஆங்கில போர்டுகளை அகற்றி வருகின்றனர்.
மஹாதேவபுரா மண்டல மூத்த சுகாதார அதிகாரி விஸ்வநாத் தலைமையில், போர்டுகள் அகற்றும் பணிகள் நடந்தன. டி.சி.பாளையாவில் பலகைகளை அகற்றாமல், அதை அடித்து நொறுக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அவரின் உத்தரவின்படியே, ஊழியர்களும் அடித்து நொறுக்கினர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து, மஹாதேவபுரா மண்டல இணை கமிஷனர் தாட்சாயினி, சுகாதார அதிகாரி விஸ்வநாத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

