பாட திட்டத்தை மாற்றாத அதிகாரிகள்; கல்வியின் தரம் குறைவதாக புகார்
பாட திட்டத்தை மாற்றாத அதிகாரிகள்; கல்வியின் தரம் குறைவதாக புகார்
ADDED : அக் 12, 2024 07:20 AM
பெங்களூரு: பாட புத்தகங்களில், மாநில பாட திட்டங்களை மட்டுமே பின்பற்றும்படி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பாட திட்டங்களை மாற்றாததால், கல்வியின் தரம் குறைவதாக தனியார் பள்ளிகள் குற்றம்சாட்டுகின்றன.
பாட திட்டங்கள் விஷயத்தில், மாநில அரசு, தனியார் பள்ளிகள் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. ஐந்து ஆண்டாக பாட திட்டங்கள் மாற்றப்படவில்லை. நடப்பு கல்வியாண்டில் பாடங்களை மாற்ற, தனியார் கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டன.
ஆனால் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளில், மாநில பாட திட்டங்களை பின்பற்றுவது கட்டாயம் என, கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. கல்வித்துறையின் சுற்றறிக்கைக்கு, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகள்கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை:
கொரோனாவால் கல்வியின் தரம், மாணவர்களின் கல்வித்திறனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடக்க பள்ளிகளில் கல்வியின் தரம், ஆண்டுதோறும் குறைகிறது. இதே காரணத்தால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைகிறது.
மத்திய, மாநில பாட திட்டங்களுக்கு இடையே, பாரபட்சம் தென்படுகிறது. கல்வித்துறை சி.பி.எஸ்.இ., பாட திட்டங்களுடன் தேசிய அளவில் போட்டி போடும் திறன், மாநில பாட திட்டங்களில் இல்லை. இதுவே கல்வியின் தரம் குறைய காரணம்.
மாநிலத்தில் 2003ல், என்.சி.எப்., மற்றும் என்.சி.இ.ஆர்.டி., சிபாரிசுபடி, ஒன்றாம் வகுப்பு, 10ம் வகுப்பு வரையிலான பாட திட்டங்கள் மாற்றப்படவில்லை.
பாட திட்டங்களில் மாற்றம் கொண்டு வருவது கட்டாயம். ஆனால் கல்வித்துறை, மாநில பாட திட்டங்களை பின்பற்றும்படி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தனியார் பள்ளிகளுடன் மோத முற்பட்டுள்ளது.
கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக, பாட புத்தகங்களை மாற்ற, கல்வித்துறை தயங்குகிறது. பழைய பாடங்களை போதிக்க முடிவு செய்துள்ளது. மாநில பாட திட்டங்கள் சிறார்களின் வயதுக்கு தகுந்தபடி இல்லை.
அவர்களின் மன வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கு தகுந்தபடி பாடங்களை சேர்ப்பதில், ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கல்வித்துறை அமைச்சர் மதுபங்காரப்பா, மாநில பாட திட்டங்கள் தரமாக உள்ளது என, கூறுகிறார்.
சிறார்களுக்கு வளமான எதிர்காலத்தை வகுக்க வேண்டிய கல்வித்துறை, அவர்களின் கல்வி விஷயத்தில் அவ்வப்போது தவறு செய்கிறது. இது குறித்து முதல்வரிடம் புகார் செய்வோம்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.