துணை ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்
துணை ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்
ADDED : ஆக 29, 2025 01:02 AM

புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை, ராஜ்யசபா செயலக அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.
கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 21ல், துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமாக இருந்த ஜக்தீப் தன்கர், தன் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
அடுத்த மாதம், 9ல் தேர்தல் நடக்கிறது. தேர்தல் அதிகாரியாக, ராஜ்யசபா செக்ரட்டரி ஜெனரல் பி.சி.மோடியும், துணைத் தேர்தல் அதிகாரிகளாக ராஜ்யசபா இணைச் செயலர் கரிமா ஜெயின் மற்றும் ராஜ்யசபா செயலக இயக்குநர் விஜய்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இதுவரையில் நடந்த துணை ஜனாதிபதி தேர்தல்கள் அனைத்துமே, 'சம்விதான் சதன்' என்றழைக்கப்படும் வட்ட வடிவ பழைய பார்லிமென்ட் கட்டடத்தில் தான் நடந்தன.
முதல்முறையாக புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது.
தேர்தல் குறித்து ராஜ்யசபா செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளின் எம்.பி.,க்களும், ஓட்டு அளிக்க தகுதி படைத்தவர்கள்.
'ராஜ்யசபாவின் நியமன எம்.பி.,க்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவர் என்பதால், இந்த தேர்தலில், அவர்களுமே ஓட்டளிக்க தகுதி படைத்தவர்கள்.
'பார்லிமென்டில் உள்ள, எப் - 101, வசுதா அரங்கில், ஓட்டுப்பதிவு, காலை 10:00 மணிக்கு துவங்கி மாலை 5:00 மணி வரை நடக்கும். அதே நாள் மாலை 6:00 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை துவங்கி முடிவுகள் அறிவிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவு தினத்தன்று, பார்லிமென்ட் வளாகம் முழுதும், சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து, பார்லிமென்ட் பாதுகாப்பு உயர் அதிகாரிளும் சி.ஐ.எஸ்.எப்., படை உயர் அதிகாரிகளும் இணைந்து, ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் வரலாற்றில், முதன்முறையாக நடத்தப்படும் முக்கியமான தேர்தல் என்ற பெருமையை, இந்த துணை ஜனாதிபதி தேர்தல் பெறவுள்ளது.
- -நமது டில்லி நிருபர் -