மலை பிரதேசங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் சிரமப்பட்டு பயணிக்கும் அதிகாரிகள்
மலை பிரதேசங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் சிரமப்பட்டு பயணிக்கும் அதிகாரிகள்
ADDED : ஏப் 18, 2024 03:13 PM

புதுடில்லி: அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் கஷேங் என்ற மலைக்கிராம ஓட்டுச்சாவடிக்கு அதிகாரிகள் சிரமப்பட்டு பயணிக்கும் வீடியோவை இந்திய தேர்தல் ஆணையம் பகிர்ந்துள்ளது.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் முதல்கட்டம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நாளை (ஏப்.,19) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கொண்டு செல்கின்றனர்.
அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் கஷேங் என்ற மலைக்கிராம ஓட்டுச்சாவடிக்கு அதிகாரிகள் பயணம் செய்யும் வீடியோவை இந்திய தேர்தல் ஆணையம் பகிர்ந்துள்ளது. அதில், அதிகாரிகள் பாதையே இல்லாத மலைக்கிராமத்தில் உள்ள மக்களிடம் ஓட்டுகளை பதிவு செய்ய, மர வேர்களை பிடித்து ஏறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஜனநாயக கடமை ஆற்றிட தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அதிகாரிகள் சிரமப்பட்டாவது ஒத்துழைக்கும் நிகழ்வை பலரும் பாராட்டியுள்ளனர்.

