ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வெற்றிமுகம்: முதல்வர் பதவியை நோக்கி உமர் அப்துல்லா!
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வெற்றிமுகம்: முதல்வர் பதவியை நோக்கி உமர் அப்துல்லா!
ADDED : அக் 08, 2024 12:44 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராகும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. தேர்தலில் காங்கிரஸ் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்தது. பா.ஜ., மெஹபூபா முப்தி கட்சி தனித்தனியே போட்டியிட்டன. ஓட்டு எண்ணிக்கை இன்று காலை முதல் வெளியாக காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியினர் 50 தொகுதிகளை கடந்து முன்னிலையில் உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளின் எண்ணிக்கையை கடந்துவிட்டது.
தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா 2 தொகுதிகளில் களம் கண்டு, இரண்டிலும் முன்னிலையில் உள்ளார். அவர் போட்டியிட்ட புட்காம், கந்தர்பால் தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறார்.
நண்பகல் 12 மணி நிலவரப்படி கந்தர்பால் தொகுதியில் 7 ரவுண்டுகள் எண்ணப்பட்டு 5 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையிலும், புட்காம் தொகுதியில் 9 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையிலும் உள்ளார்.
2 தொகுதிகளிலும் அவர் ஏற்ற நிலையில் இருப்பதோடு, காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள அவரின் கட்சியும் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அனைத்து தொகுதிகளிலும் வெளியிட நேரம் பிடிக்கும். தற்போதுள்ள சூழலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கட்சி கூட்டணி 50 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
இந்த கூட்டணி ஆட்சி அமைந்தால் உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீரின் முதல்வராகும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. அதிகாரப்பூர்வமாக ஒட்டு மொத்த தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இறுதியான நிலவரங்கள் தெரியும் என்றும், உமருக்கே முதல்வர் வாய்ப்பு என்றும் கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.

