ADDED : நவ 05, 2024 02:28 AM

புதுடில்லி ரயில் டிக்கெட் முன்பதிவு, புறப்பாடு - வருகை, சேவை குறைபாடு குறித்த புகார்கள், முன்பதிவு இல்லாத டிக்கெட், நடைமேடை சீட்டு உட்பட ரயில்வே தொடர்பான அனைத்து தேவைகளுக்கும், 100 கோடி ரூபாய் செலவில் ஒரே செயலியை ரயில்வே நிர்வாகம் உருவாக்கி வருகிறது.
ரயில் சேவையை பயன்படுத்தும் பயணியர், ஒவ்வொரு சேவைக்கு என்று தற்போது தனித்தனியே உள்ள செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, 'ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட்' என்ற செயலி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.
ரயில் பயணத்தின்போது உணவு ஆர்டர் செய்வதற்கு, 'ஐ.ஆர்.சி.டி.சி., இ - கேட்டரிங்' செயலி பயன்படுத்தப்படுகிறது.
பயணத்தின் போது புகார் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க, 'ரயில் மடாட்' என்ற செயலி உள்ளது.
பயண அட்டை
முன்பதிவு இல்லா டிக்கெட்டை ஆன்லைன் வாயிலாக பெற, யு.டி.எஸ்., என்ற செயலியும்; ரயில் இயக்கப்படும் விபரங்களை தெரிந்து கொள்ள, என்.டி.எஸ்., என்ற செயலியும் பயன்பாட்டில் உள்ளன.
இவற்றில், ஐ.ஆர்.சி.டி.சி., செயலியை மட்டும் 10 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
ரயில் சேவைகளுக்காக அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இது உள்ளது. 2023 - 24ல் ஐ.ஆர்.சி.டி.சி., 4,270 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. இதில், 1,111 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்துள்ளது.
இந்த காலகட்டத்தில், 45.30 கோடி டிக்கெட்கள் ஐ.ஆர்.சி.டி.சி., வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
டிக்கெட் முன்பதிவில் மட்டும் 30.33 சதவீத வருவாய் கிடைத்துஉள்ளது.
நடைமேடை சீட்டு மற்றும் மாதாந்திர ரயில் பயண அட்டை பெறுவதற்கான யு.டி.எஸ்., செயலியை ஒரு கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
'சூப்பர் ஆப்'
இந்த அனைத்து செயலிகளையும், சி.ஆர்.ஐ.எஸ்., எனப்படும் ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் உருவாக்கி நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், இந்த அனைத்து செயலிகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக, 'சூப்பர் ஆப்' என்ற புதிய செயலியை சி.ஆர்.ஐ.எஸ்., உருவாக்கி வருகிறது. இதற்காக 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.