ஒரே நாடு; ஒரே தேர்தல் அரசியலமைப்பிற்கு எதிரானதல்ல: முன்னாள் தலைமை நீதிபதிகள்
ஒரே நாடு; ஒரே தேர்தல் அரசியலமைப்பிற்கு எதிரானதல்ல: முன்னாள் தலைமை நீதிபதிகள்
ADDED : ஜூலை 12, 2025 02:07 AM

புதுடில்லி: லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதா லோக்சபாவில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா, பரிசீலனைக்காக பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை பா.ஜ., எம்.பி. சவுத்ரி தலைமையிலான குழு ஆய்வு செய்கிறது. மசோதாவின் விதிகள் தொடர்பாக சட்ட வல்லுநர்களின் கருத்துக்களை இக்குழு பெற்று வருகிறது.
இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டுக்குழு முன் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் கேஹர் தங்கள் பரிந்துரைகளை நேற்று சமர்பித்தனர். அதில் இடம்பெற்றவை குறித்து பார்லி., வட்டாரங்கள் கூறியதாவது:
மசோதாவில் சில தெளிவற்ற பகுதிகள் உள்ளன. அந்த குழப்பங்களை நீக்க வேண்டும். நெருக்கடி நிலையின் போது என்ன நடக்கும் என்பதையும் மசோதா தெளிவுபடுத்த வேண்டும்.
அதே சமயம் மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை பாதிக்காது. மசோதாவின் விதிகளில் சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்து முடிவெடுப்பதில் பார்லிமென்ட் அல்லது மத்திய அமைச்சரவைக்கு ஒரு பங்கு இருக்க வேண்டும்.
தேர்தல் கமிஷனுக்கு கட்டுபாடற்ற அதிகாரம் வழங்கக் கூடாது, ஆகிய பரிந்துரைகளை வழங்கினர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

