ADDED : அக் 24, 2026 05:17 PM
நொய்டா: டில்லி அருகே நொய்டாவில், அடுத்தடுத்த ஐந்து கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்.
உத்தர பிரதேச மாநிலம், நொய்டா 126 செக்டார் அருகே, ராய்ப்பூரில் தற்காலிகமாக அமைத்திருந்த ஒரு கடையில் இன்று (அக்.,24) காலை தீப்பற்றி, அடுத்தடுத்த ஐந்து கடைகளுக்கும் வேகமாக பரவியது.
தகவல் அறிந்து, ஆறு வண்டிகளில் தீயணைப்பு படையினர் வந்தனர். ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒரு கடைக்குள் மயங்கிக் கிடந்த ஒருவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து, நொய்டா 126 செக்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இறந்தவர் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்தவர் குறித்த விபரம் உடனடியாக தெரியவில்லை.
தீப்பற்றியதற்கான காரணம் குறித்து போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரித்து வருகின்றனர்.
