உச்சம் தொட்ட வெங்காயம் ஏற்றுமதி; 5 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு
உச்சம் தொட்ட வெங்காயம் ஏற்றுமதி; 5 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு
ADDED : நவ 11, 2024 10:52 AM

புனே: ராஜஸ்தான், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயத்தின் ஏற்றுமதி அதிகரித்த நேரத்தில், விலை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்தது.
வெங்காயம் மீதான இறக்குமதி வரியை வங்கதேசம் நீக்கியதால், இந்தியாவில் இருந்து அந்நாட்டுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நாசிக்கில் உள்ள பெஞ்ச்மார்க் லாசல்கான் சந்தையில் வெங்காயத்தின் விலை கடந்த வாரம் ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கிலோ ரூ.54 ஐ தாண்டியது. தீபாவளிக்காக நாடு முழுவதும் பல நாட்களாக மொத்த சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் வரத்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரத்தில் மொத்த விற்பனை விலை 35 சதவீதம் உயர்வை கண்டுள்ளது. தோட்டக்கலை உற்பத்தி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் விகாஸ் சிங் கூறியதாவது: வரவு குறைந்ததால் விலை உயர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதம் அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்திற்கு சந்தையில் அதிக விலை கிடைக்கிறது, அதே சமயம் செப்டம்பரில் பெய்த கனமழையால் வரத்து குறைந்துள்ளது.
உள்ளூர் வெங்காய விலையை குறைக்கும் வகையில் வெங்காயத்தின் மீதான இறக்குமதி வரியை வங்கதேசம் ஜனவரி 15ம் தேதி வரை நீக்கியதால் அந்நாட்டுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. வெங்காய ஏற்றுமதியை தடை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக வெங்காய விவசாயிகள் ஒன்றிணைந்து ஓட்டளித்தனர். இதை கருத்தில் கொண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை இந்தியா பாதியாகக் குறைத்தது. இதுவே ஏற்றுமதி அதிகரிக்கவும் உள்நாட்டில் விலை அதிகரிக்கவும் காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.
ராஜஸ்தானில் உள்ள அல்வார் போன்ற சில சந்தைகளில் இருந்து வெங்காயம் வரத்து துவங்கி உள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் வெங்காயத்தின் விலை மொத்த சந்தைகளில் கிலோ ரூ. 30க்கு குறையும் என வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெங்காயத்தின் விலை 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.