ADDED : டிச 01, 2024 04:59 AM

ரோஜா பூக்களில் இருந்து, 'ரோஸ் வாட்டர்' எனும் பன்னீர் தயார் செய்து, விற்பனை செய்து வரும் கோவையைச் சேர்ந்த தனலட்சுமி:
எம்.எஸ்சி., மைக்ரோ பயாலஜியும், எம்.பில்.,லும் படித்து முடித்து, அண்ணா பல்கலையில பயோ டெக்னாலஜி துறையில் முனைவர் பட்டம் படித்தேன். தாவர அறிவியல் தொடர்பான விஷயங்களில், எனக்கு இயல்பாகவே ஆர்வம் அதிகம்.
அதனால், ரோஜா பூக்களில் இருந்து தயாரிக்கிற ரோஸ் வாட்டருக்கு விற்பனை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று தெரிந்ததால், இந்த தொழிலில் இறங்க முடிவு செய்தேன்.
இதற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. ரோஸ் வாட்டர் தயாரிப்பு தொழிலில் இறங்கினால், நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது.
அதை தயார் செய்ய, 3.50 லட்சம் ரூபாய் செலவில், இயந்திர கட்டமைப்புகளை ஏற்படுத்தி, உற்பத்தியை துவங்கினேன்.
சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் மட்டும், அதுவும் சில விவசாயிகள் தான், 'டமாஸ்க்' ரக ரோஜா சாகுபடி செய்கின்றனர். இதனால், எப்போதும் இந்த ரகத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மாதத்திற்கு, 50 கிலோ பூக்கள் கிடைப்பதே மிகவும் சிரமம்.
மழைக் காலங்களில், 1 கிலோ பூக்கள் கூட கிடைக்காது. ஆண்டுக்கு, 10 மாதம் தான் டமாஸ்க் ரகம் கிடைக்கும். வரத்து மிகவும் குறைவாக இருப்பதால், விலை எப்போதுமே அதிகம் தான். கிலோ 200- - 250 ரூபாய் என்று வாங்கி, ஆண்டுக்கு, 700 லிட்டர் ரோஸ் வாட்டர் தயார் செய்கிறேன்.
மொத்த விலையில், 1 லிட்டர் 850 ரூபாய் என, விற்பனை செய்கிறேன். இதன் வாயிலாக, ஆண்டுக்கு 5.95 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். எல்லா செலவுகளும் போக, 2.80 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
இது, சவாலான தொழில் தான்; ஆனாலும், இதை மிகவும் நேசித்து செய்கிறேன். 'ரோஸ் வாட்டர் தயாரிப்பது எப்படி?' என்று, 'யு டியூப் சேனல்'களில் ஏராளமான வீடியோக்கள் வருகிறது; அதில் நிறைய தவறான தகவல்கள் இருக்கிறது. அதை நம்பி சிலர், பல லட்சம் ரூபாய் செலவு செய்து, இயந்திரங்களை வாங்கி, நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
அரசு நிறுவனங்கள் அல்லது சில நேர்மையான தனியார் நிறுவனங்கள் வழங்கக்கூடிய பயிற்சிகளில் நேரடியாக பங்கேற்று தான், இந்தத் தொழிலில் இறங்கணும். முழு ஈடுபாட்டோடு செய்தால், நிச்சயம் வெற்றி அடையலாம்.
தொடர்புக்கு:
99403 21385

