ADDED : நவ 16, 2024 02:30 AM

சபரிமலை:கார்த்திகை மாதம், 1ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகள் சபரிமலையில் ஒரு மண்டல காலம் என, அழைக்கப்படுகிறது. தொடர்ந்து, 41வது நாள் மண்டல பூஜை நடக்கும்.
இன்று துவங்கும் மண்டல காலத்துக்காக நேற்று மாலை, 4:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து, 18 படிகள் வழியாக சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்தார்.
தொடர்ந்து, 18 படிகளின் கீழ்ப்பகுதியில் இருமுடி கட்டுடன் நின்று கொண்டிருந்த புதிய மேல் சாந்திகள், சபரிமலை அருண்குமார் நம்பூதிரி, மாளிகைப்புறம் வாசுதேவன் நம்பூதிரி ஆகியோரை கைபிடித்து அழைத்து, ஸ்ரீ கோவில் முன் வந்தனர்.
இருவருக்கும் திருநீறு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு சபரிமலை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரிக்கு தந்திரி பிரம்மதத்தன் அபிஷேகம் நடத்தி, அய்யப்ப மூல மந்திரத்தை சொல்லிக் கொடுத்து, ஸ்ரீ கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்.
இதுபோல, மாளிகைப்புறத்திலும் மேல் சாந்தி வாசுதேவன் நம்பூதிரிக்கு அபிஷேகம் நடத்தி, தேவி மூல மந்திரம் சொல்லிக் கொடுத்து, ஸ்ரீ கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். வேறு விசேஷ பூஜைகள் நடக்கவில்லை.
இரவு, 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.இன்று அதிகாலை, 3:00 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்த பின், தந்திரி பிரம்மதத்தன் அய்யப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி, நெய்யபிஷேகத்தை துவங்கி வைப்பார். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடக்கும்.

