'ஆப்பரேஷன் சிந்துார்' இன்னும் முடியவில்லை.. தொடர்ந்து தாக்குவோம்!: ராஜ்நாத் தகவல்
'ஆப்பரேஷன் சிந்துார்' இன்னும் முடியவில்லை.. தொடர்ந்து தாக்குவோம்!: ராஜ்நாத் தகவல்
ADDED : மே 09, 2025 04:15 AM

''நம் ராணுவம், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் மேற்கொண்ட பதிலடி தாக்குதலில், 100 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். இது இன்னும் முடியவில்லை. அச்சுறுத்தலான காரியங்களில், பாகிஸ்தான் மீண்டும் இறங்கினால், அதற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. மிக தீவிரமான பதிலடி தாக்குதலை தொடர்வோம்,'' என, அனைத்து கட்சி கூட்டத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, அனைத்து கட்சி தலைவர்களிடம் விளக்குவதற்காக, மத்திய அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.
பார்லிமென்ட் வளாகத்திலுள்ள நுாலக அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். காங்கிரஸ் தரப்பில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றனர். திரிணமுல் காங்., சார்பில் சுதீப் பந்தோபாத்யா, தி.மு.க., சார்பில் பாலு உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
முகாம்கள் தரைமட்டம்
பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தரப்பட்ட பதிலடி குறித்தும், அதன்பின் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. மொத்தம் ஒன்பது இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், அச்சுறுத்தலான காரியங்களில் பாகிஸ்தான் இறங்கினால், அதற்கு ஒருபோதும், இந்தியா அடிபணியாது; மிக தீவிரமான பதிலடி தரப்படும்.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் நாம் உள்ளோம். 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை இன்னும் முடியவில்லை; தற்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பதற்றமான சூழ்நிலையை, மென்மேலும் விரிவுபடுத்திக் கொண்டு செல்லும் எண்ணம் இந்தியாவிடம் இல்லை. அதேசமயம் மீண்டும் தாக்குதல் நடவடிக்கையில் பாகிஸ்தான் இறங்கினால், அதைப்பார்த்து, ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பதில் தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், ''நடந்திருப்பது ராணுவ நடவடிக்கை. எனவே, இது விஷயமாக, கூடுதலான தகவல்கள் எதையும் பகிர்வது, நல்லதல்ல. ''எந்த ஒரு குறிப்பிட்ட தகவலையும் வெளியிடுவதற்கு நேரம் இதுவல்ல. ஒவ்வொரு நிமிடமும், சூழ்நிலைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதனால், எதைப்பற்றியும், தற்போது குறிப்பிட முடியாது,'' என்றார்.
ஆதரவளிக்கிறோம்
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசுகையில், ''தற்போதுள்ள சூழலை நாங்கள் முழுதும் புரிந்து கொண்டுள்ளோம். இந்த விஷயத்தில் அரசு எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும், நாங்கள் ஆதரவளிக்கிறோம்,'' என்றார். தற்போது நிலவும் பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு, பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டு விவாதிக்க வேண்டும் என, பல்வேறு எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.
கூட்டத்தை நிறைவு செய்து பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ''இந்த கூட்டம் குறித்து, 'அனைத்து கட்சிகளும் ஒருமுகமாக இருப்பதோடு மட்டுமல்லாது, ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஒன்றுபட்டு ஓரணியாக நிற்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது,'' என்ற தகவலை பிரதமர் மோடி அனுப்பியுள்ளார். ''கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. இந்த விவகாரத்தில் நாம் அனைவரும் ஒரே நேர்க்கோட்டில் ஒன்றுபட்டு நிற்கிறோம்.
''அனைத்து அரசியல் கட்சிகளும், ஒரே குரலில் பேசுவது என்பது, நம் நாட்டிலிருந்து சர்வதேச அரங்கிற்கு வெளியிடப்படும் மிக முக்கியமான செய்தியாகும். ''இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, மக்கள் அனைவருமே ஒற்றுமையுடன் நிற்கின்றனர். ''அரசியல் கட்சிகள், தங்களுடைய கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்து, ஒருமித்த குரலில் பேசுவது, நம் ராணுவ வீரர்களுக்கு, மிகப்பெரிய ஊக்கமும், பலத்தையும், கூடுதல் தன்னம்பிக்கையையும் தரும். இது வரவேற்கத்தக்கது,'' என தெரிவித்தார்.
- நமது டில்லி நிருபர் -

