மஹா.,வில் பிடிவாதம் தளர்த்திய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்
மஹா.,வில் பிடிவாதம் தளர்த்திய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : டிச 09, 2024 03:10 AM

மும்பை : மஹாராஷ்டிரா தேர்தலில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாக கூறி, நேற்று முன்தினம் பதவியேற்பு விழாவை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நேற்று பதவியேற்றனர்.
மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 230 இடங்களில் மஹாயுதி கூட்டணி வென்றது.
இதில், பா.ஜ., மட்டும் 132 இடங்களில் வென்று தனிக்கட்சியாக உருவெடுத்தது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின.
காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி அடங்கிய எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாடி 48 இடங்களை மட்டுமே வென்றன.
மஹாராஷ்டிரா முதல்வராக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் கடந்த 5ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. நடந்து முடிந்த தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவில் முறைகேடு நடந்ததாகக் கூறி, எதிர்க்கட்சியினர் அன்று நடந்த எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பை புறக்கணித்தனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த காங்கிரசின் நானா படோல், விஜய் வடேட்டிவார், அமித் தேஷ்முக், சரத்பவாரின் தேசியவாத காங்.,கைச் சேர்ந்த ஜிதேந்திர அவ்ஹாத், சிவசேனா உத்தவ் பிரிவின் ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட சிலர் நேற்று எம்.எல்.ஏ.,க்களாக பதவிஏற்றுக் கொண்டனர்.