பீஹார் தேர்தலில் நேருக்கு நேராய் மோதும் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்கள்
பீஹார் தேர்தலில் நேருக்கு நேராய் மோதும் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்கள்
ADDED : அக் 17, 2025 09:42 PM

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் கட்சிகளே கூட்டணியை மதிக்காமல் இஷ்டம் போல் வேட்பாளர்களை அறிவித்து வரும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
பீஹார் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் அதிக காலம் இல்லை. நவ.6 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. நவ.14ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விடும்.
நாட்கள் வெகு குறைவே என்பதால் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரம், தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தேர்தல் களம் வேகம் எடுத்துள்ளது. இதில் ஆளும் கட்சிக் கூட்டணியை விட எதிர்க்கட்சிகள் கூட்டணியில் தான் சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இங்கு எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகள் ராஷ்டிரிய ஜனதா தளம். காங்கிரஸ், சிபிஐ மற்றும் இன்னபிற சிறு, சிறு கட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. மிக பெரும் எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி என்று வர்ணனையுடன் இவர்கள் களம் கண்டாலும், தொகுதி ஒதுக்கீடுகளில் இன்னும் குடுமிப்பிடி சண்டை தீரவில்லை.
ஒரே தொகுதிக்காக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் முண்டாசு தட்டிக் கொண்டு களம் இறங்கி உள்ளன.
அவற்றில் சில தொகுதிகளை இங்கு பார்ப்போம்;
வைஷாலி தொகுதியில் சஞ்சீவ்குமார் என்பவருக்கு காங்கிரஸ் சீட் கொடுத்துள்ளது. ஆனால் இதே தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியான ராஷ்டிரிய ஜனதா தளம் சின்னத்துடன் வேட்பாளர் அஜய் குஷ்வாஹா களம் இறங்கி உள்ளார். இந்த கூட்டணியின் தலைமையே ராஷ்டிரிய ஜனதா தளம் தான்.
லால்கஞ்ச் தொகுதியில் உள்ளூரின் பிரபல பிரமுகர் முன்னா சுக்லாவின் மகள் ஷிவானி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் ஆதித்யகுமார் ராஜா என்ற வேட்பாளரை காங்கிரஸ் இறக்கி இருக்கிறது.
பாச்வாரா தொகுதியில் போட்டியிடுவதிலும் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் கும்மாங்குத்து தான். இங்கு சிபிஐ வேட்பாளர் அவதேஷ் குமார் ராய் சுயேட்சையாக போட்டியிடுகிறார்(இவர் ஒரு முன்னாள் எம்எல்ஏ. 2000ம் ஆண்டு தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளரிடம் வெறும் 464 ஒட்டுகளில் வெற்றியை இழந்தவர்). இவரை எதிர்த்து போட்டியிடுவது காங்கிரஸ் வேட்பாளர் ஷிவபிரகாஷ் கரிப்தாஸ்.
கவுராபாரம் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளராக அப்சல் அலிகான் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் கூட்டணி கட்சியான விகாஷீல் இன்சான் பார்ட்டி தலைவர் முகேஷ் சஹானியின் சகோதரர் சந்தோஷ் சாஹ்னி களத்தில் உள்ளார்.
சமஸ்திபூர் மாவட்டத்தின் ரோசெரா தொகுதியில் சிபிஐ வேட்பாளராக லஷ்மண் பாஸ்வான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இங்கு காங்கிரஸ் வேட்பாளராக விகே ரவி இருக்கிறார். ராஜபாக்கர் தொகுதியில் பிரதிமா தாஸ் காங்கிரஸ் வேட்பாளராகவும், சிபிஐ(எம்எல்) வேட்பாளராக மோஹித் பாஸ்வானும் போட்டியிடுகின்றனர்.
பிஹார்ஷரிப் தொகுதியில் இதே கூ.ட்டணி கட்சிகள் கலாட்டாதான். இங்கும் காங்கிரஸ் வேட்பாளர் உமேர் கான், சிபிஐ வேட்பாளர் சதிஷ் யாதவ் களம் காண்கின்றனர்.
இப்படி, கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளே ஆளாளுக்கு நேர்எதிராய் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது, கூட்டணியில் ஒற்றுமை இல்லாததையே காட்டுகிறது. வேட்பாளர்கள் தேர்வு, தொகுதிகள் ஒதுக்கீடு போன்றவற்றில் இத்தனை குழப்பங்கள், இது நிச்சயம் ஓட்டுபதிவு பிளஸ் தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.