கடன் தள்ளுபடி கிடையாது என்ற துணை முதல்வருக்கு எதிர்ப்பு
கடன் தள்ளுபடி கிடையாது என்ற துணை முதல்வருக்கு எதிர்ப்பு
ADDED : மார் 30, 2025 11:29 PM

மும்பை: 'விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது; கடன்களை விவசாயிகள் திருப்பி செலுத்த வேண்டும்' என, மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித்பவார் கூறியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மஹாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கட்சிகளின் மஹாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகவும், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்., தலைவர் அஜித்பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகவும் பதவியேற்றனர்.
தேர்தலின்போது, விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என, மஹாயுதி கூட்டணி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மஹா.,வில் உள்ள பாரமதியில் நடந்த நிகழ்ச்சியில், நேற்று முன்தினம் பேசிய அஜித் பவார், 'தேர்தலில் அளிக்கும் வாக்குறுதிகள் எப்போதுமே நேரடியாக செயல்படுத்தப்படுவதில்லை. மஹாராஷ்டிர விவசாயிகள், தங்கள் பயிர்க் கடன்களை மார்ச் 31-க்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். நிதி சூழ்நிலையை கருத்தில் வைத்து, எதிர்காலத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும். எனினும், இப்போதைக்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்' என்றார்.
அஜித் பவாரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், சரத்பவார் பிரிவு தேசியவாத காங்., - உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, இந்த சர்ச்சைக்கு நேற்று விளக்கம் அளித்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ''விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாட்டோம் என அஜித் பவார் கூறவில்லை. அரசின் நிலைமையை மட்டுமே அவர் தெரிவித்தார்,'' என கூறினார்.
மற்றொரு துணை முதல்வரான ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ''எதிர்க்கட்சியினரைப் போன்று, தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததை அச்சுப் பிழை என கூறி, நாங்கள் தப்ப முயற்சிக்க மாட்டோம். அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம். பட்ஜெட்டில் கூட, வேளாண் துறைக்கு மட்டும் பயிர் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களுக்காக 45,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ேளாம்,'' என விளக்கம் அளித்தார்.