சாமுண்டி மேம்பாட்டு ஆணைய கூட்டம் நடத்திய முதல்வருக்கு எதிர்ப்பு!
சாமுண்டி மேம்பாட்டு ஆணைய கூட்டம் நடத்திய முதல்வருக்கு எதிர்ப்பு!
ADDED : செப் 03, 2024 10:36 PM

மைசூரு : ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஷேத்திர மேம்பாட்டு ஆணையத்தின் கூட்டத்தை நடத்திய முதல்வர் சித்தராமையாவுக்கு, மன்னர் குடும்பத்தினர் யதுவீர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''இதன் வாயிலாக, எங்கள் வழிபாட்டுக்கும், மன்னர் குடும்பத்தின் பாரம்பரியத்துக்கும் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மன்னர் குடும்பத்தின் உரிமையை பறிக்கும் வகையில் முதல்வர் செயல்பட்டுள்ளார்,'' எனவும், அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மைசூரு சாமுண்டி மலையில், பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி கோவில் அமைந்துள்ளது. மன்னர் காலத்தில், உடையார் மன்னர் வம்சத்தினர் இதை கட்டினர். தற்போதும், காலம், காலமாக தங்கள் வழிபாட்டையும், பாரம்பரியத்தையும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்த கோவிலை, கர்நாடக அரசின் ஹிந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. ஆனாலும், மன்னர் வம்சத்துக்கு இப்போதும் அதே கவுரவம் அளிக்கப்படுகிறது.
* இடைக்கால உத்தரவு
இதற்கிடையில், கோவிலை மேம்படுத்தும் வகையில், 'ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஷேத்திர மேம்பாட்டு ஆணையம் - 2024' என்ற புதிய சட்டத்தை, கர்நாடக அரசு நடப்பாண்டு கொண்டு வந்தது.
இதற்கு, மன்னர் வம்சத்தின் பிரமோதா தேவி கடும் ஆட்சேபனை தெரிவித்தார். சாமுண்டி மலை எங்களுக்கு தான் சொந்தம் என்று, நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. அதற்கான ஆவணமும் இருப்பதாக அவர் சமீபத்தில் கூறி இருந்தார்.
அரசுக்கு எதிராக, மன்னர் வம்சத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கை, ஜூலை 26ம் தேதி விசாரித்த நீதிமன்றம், 'அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, சட்டத்தை அமல்படுத்த கூடாது' என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
* முதல்வர் தரிசனம்
இந்நிலையில், ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஷேத்திர மேம்பாட்டு ஆணையத்தின் முதல் கூட்டம், முதல்வர் சித்தராமையா தலைமையில், சாமுண்டீஸ்வரி சன்னிதியில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முன்னதாக சாமுண்டீஸ்வரி தேவியை முதல்வர் தரிசனம் செய்தார்.
இந்த கூட்டம் நடத்தியற்கு, மன்னர் வம்சத்தை சேர்ந்தவரும், மைசூரு பா.ஜ., - எம்.பி.,யுமான யதுவீர், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:
'ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஷேத்திர மேம்பாட்டு ஆணையம் - 2024' சட்டம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, சட்டத்தை அமல்படுத்த கூடாது என்று நீதிமன்றம் கடந்த விசாரணையின்போது உத்தரவிட்டது.
* 5ல் விசாரணை
இதையும் மீறி, கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, நாளை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. இதற்கிடையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஆணையத்தின் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, எங்கள் வழிபாட்டுக்கும், மன்னர் குடும்பத்தின் பாரம்பரியத்துக்கும் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மன்னர் குடும்பத்தின் உரிமையை பறிக்கும் வகையில் முதல்வர் சித்தராமையா செயல்பட்டுள்ளார்.
எங்கள் உரிமையை எப்போதும் விட்டு கொடுக்க மாட்டோம். சாமுண்டி மலையை கட்டுப்படுத்த, அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. கோவில் உண்டியல் காணிக்கையை, அந்தந்த கோவில் மேம்பாட்டுக்கு தான் பயன்படுத்த வேண்டும். இந்த அரசு, ஹிந்து கோவில்கள் மீது மட்டும் தொடர்ந்து இப்படி செயல்படுகிறது. எனவே நாங்கள் சட்ட போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிகரெட், மது, 'குட்கா' பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஷேத்திர மேம்பாட்டு ஆணையத்தின் முதல் கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
சாமுண்டி மலையை மேம்படுத்த தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு தரமான வசதிகள் செய்து தருவதே எங்கள் நோக்கம். இந்த புனித தலத்தின் பாரம்பரியம், வரலாறு காக்கப்பட வேண்டும்.
அவ்வப்போது ஆலோசனை நடத்தி, துாய்மைக்கு அதிக முன்னுரிமை தர வேண்டும். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், வாகனங்களை நிறுத்த உரிய வசதி ஏற்படுத்த வேண்டும்.
கோவில் மேம்பாட்டுக்கு கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்தும், எதிர்பார்த்த வேகத்தில் பணிகள் முடிவதில்லை. இதை ஏற்க முடியாது. உரிய நேரத்தில் பணிகள் செய்யாவிட்டால், நடவடிக்கை எடுப்பேன்.
சாமுண்டீஸ்வரி தேவி மீது லட்சக்கணக்கான பக்தர்கள், நம்பிக்கை வைத்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து, தரிசனம் செய்கின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்ய வேண்டும். சாமுண்டீஸ்வரி சன்னிதியில் தரமான பணிகள் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்று கொப்பால் ஹுலிகம்மா கோவில், கட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. அங்கும் ஆணையம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
* 23 கோவில்கள்
சாமுண்டி மலைக்கு உட்பட்ட 23 கோவில்கள் மேம்படுத்தப்படும். இதற்காக செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. சாமுண்டி மலையில், புகை பிடிக்கவும், மது அருந்தவும், குட்கா பயன்படுத்தவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தரிசன வேளையில், மொபைல் போன் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிலில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்படும். குற்ற சம்பவங்களை தடுக்க தனி கமிட்டி அமைக்கப்படும். தற்போதைக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படாது. அனைத்து ஜாதி, மதத்தினரும் கோவிலுக்கு வரலாம்.
பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் இல்லா புனித தலமாக மாற்றப்படும். இதற்காக, 11 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். பக்தர்களுக்கு தரமான, ருசியான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும். கோவில் சொத்துகளை ஆக்கிரமித்திருக்கும் வாய்ப்பு இருப்பதால், சர்வே நடத்தி அடுத்த கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
5 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்
சாமுண்டி மலைக்கு உட்பட்ட பிரசன்ன கிருஷ்ண சுவாமி கோவில், காயத்ரியம்மன் கோவில், புவனேஸ்வரி அம்மன் கோவில், கோட்டே ஆஞ்சநேயா கோவில், வராஹா சுவாமி ஆகிய ஐந்து கோவில்களுக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்படும். இங்கு பணியாற்றும் நிரந்தர ஊழியர்களின் பிள்ளைகளுக்கு, இலவச கல்வி அளிப்பதற்கும், நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.