விஷவாயு கழிவு அழிப்புக்கு எதிர்ப்பு: நீதிமன்றத்தை நாட ம.பி., அரசு முடிவு
விஷவாயு கழிவு அழிப்புக்கு எதிர்ப்பு: நீதிமன்றத்தை நாட ம.பி., அரசு முடிவு
ADDED : ஜன 04, 2025 11:57 PM

போபால்: மத்திய பிரதேசத்தின் யூனியன் கார்பைடு கழிவுகளை பீதாம்புர் தொழிற்பேட்டைக்கு எடுத்து வந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுபடி செயல்பட மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபாலில் யூனியன் கார்பைடு பூச்சிக்கொல்லி ஆலை செயல்பட்டது. இங்கு கடந்த 1984 டிச., 23ல் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில், அப்பகுதியில் வசித்த 5,500 பேர் உயிரிழந்தனர்; ஐந்து லட்சம் பேருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.
பூட்டி கிடக்கும் இந்த ஆலையில் எஞ்சியுள்ள கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தன. இதை விசாரித்த ம.பி., உயர் நீதிமன்றம், கழிவுகளை அகற்றி, அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க சமீபத்தில் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, தொழிற்சாலையில் இருந்து 3 லட்சம் கிலோ கழிவுகள் சேகரிக்கப்பட்டன.
அவை, 250 கி.மீ., தொலைவில் உள்ள தார் மாவட்டத்தின் பீதாம்புரில் உள்ள தொழிற்பேட்டைக்கு லாரிகளில் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.
இவற்றை, அங்குள்ள கழிவு மறுசுழற்சி நிறுவனத்தில் அறிவியல்பூர்வமாக அழித்து அகற்ற உள்ளனர்.
இந்நிலையில், அந்த கழிவுகள் பீதாம்புரில் உள்ள மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில், இருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் இந்த பிரச்னை பூதாகரமானது.
இதையடுத்து, முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் முதல்வர் மோகன் யாதவ் கூறியதாவது:
மத்திய பிரதேச அரசு மக்கள் நலனுக்கே முன்னுரிமை வழங்குகிறது. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி, யூனியன் கார்பைடு கழிவுகளை பீதாம்புருக்கு மாற்றியுள்ளோம்.
இது தொடர்பாக நிறைய வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவற்றை மக்கள் நம்ப வேண்டாம். தற்போது, பீதாம்புரில் நிலவும் சூழ்நிலை புரிகிறது.
பொது மக்களிடையே அச்சுறுத்தல் அல்லது அச்ச உணர்வு எழுந்தால், இந்த விஷயத்தை நீதிமன்றத்தில் முன்வைப்போம். அவர்கள் உத்தரவுப்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

