ஈ.டி., அதிகாரிகள் மீதான எப்.ஐ.ஆர்., ரத்து செய்து உத்தரவு
ஈ.டி., அதிகாரிகள் மீதான எப்.ஐ.ஆர்., ரத்து செய்து உத்தரவு
ADDED : நவ 09, 2024 03:30 AM
பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக, விசாரணை நடத்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது பதிவான எப்.ஐ.ஆரை., உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்ட பின், ஆணையத்தில் 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. முறைகேடு தொடர்பாக, நாகேந்திரா அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது.
வால்மீகி ஆணைய முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. வழக்கு குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளுடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை பெயரில், தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டுகின்றனர் என, குற்றஞ்சாட்டி, சமூக நலத்துறை இயக்குனர் கல்லேஷ், வில்சன்கார்டன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மனோஜ் மித்தல், முரளி கண்ணன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதை ரத்து செய்யக் கோரி, அவர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கிடையில் சமூக நலத்துறை இயக்குனர் கல்லேஷ், தான் அளித்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கல்லேஷ் புகாரை திரும்பப் பெற்றது, நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது.
புகார் வாபஸ் பெறப்பட்டதால், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது பதிவான எப்.ஐ.ஆரை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.