ஓய்வூதியம் பெறும் முதியோர் எண்ணிக்கை கணக்கெடுக்க உத்தரவு
ஓய்வூதியம் பெறும் முதியோர் எண்ணிக்கை கணக்கெடுக்க உத்தரவு
ADDED : மே 13, 2025 10:05 PM
விக்ரம்நகர்:ஓய்வூதியம் பெறும் முதியோர் விவகாரத்தில் முறைகேடு புகார் எழுந்துள்ளதையடுத்து, ஓய்வூதியம் பெறும் முதியோரை கணக்கெடுக்கும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இத்தகைய திட்டங்களில் தகுதியான பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை தகுதியற்றவர்களும் பொய்யான தகவல்களை கூறி பெறுகின்றனர். இதனால் அரசுக்கு மாதந்தோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
கணவனை இழந்த பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், விவாகரத்து பெற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படுகிறது.
'துன்பத்தில் உள்ள பெண்கள்' என்ற திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட 3.5 லட்சம் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை கிடைக்கிறது. இந்த திட்டம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சமீபத்தில் ஆய்வு நடத்தியது.
அப்போது, 25,000க்கும் அதிகமான தகுதியற்ற பயனாளிகள் இருப்பது கண்டறியப்பட்டது. பயனாளிகள் பட்டியலில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டனர்.
இதேபோல் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 4.5 லட்சத்திற்கும் அதிகமான மூத்த குடிமக்களுக்கு மாநில அரசு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குகிறது. 60 - 69 வயதுடைய முதியோருக்கு 2,000 ரூபாயும், 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியோருக்கு மாதந்தோறும் 2,500 ரூபாயும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்திலும் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து தகுதியான பயனாளிகளுக்கு தான் உதவித்தொகை வழங்கப்படுகிறதா என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு நேற்று முன் தினம் உத்தரவிட்டது.
முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களின் விபரங்களைச் சரிபார்க்க சமூக நலத்துறை விரைவில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்த உள்ளது.