மத்திய அமைச்சரின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய உத்தரவு
மத்திய அமைச்சரின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய உத்தரவு
UPDATED : ஏப் 09, 2024 04:57 PM
ADDED : ஏப் 09, 2024 04:44 PM

புதுடில்லி: காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் புகார் காரணமாக, மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகரின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
சொத்து விவரம்
மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் சொத்து குறித்த பிரமாணப் பத்திரத்தில் 2022 நிதியாண்டில் தனது வருமானம் ரூ.680 எனக்கூறியிருந்தார். மேலும் 20 மற்றும் 23ம் நிதியாண்டில் முறையே ரூ.17.5 லட்சம் மற்றும் ரூ.5.50 லட்சம் வருமானம் வந்தது. தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.28 கோடி. பெங்களூருவில் ரூ.14.4 கோடி மதிப்பு நிலம் உள்ளது எனக்கூறி இருந்தார்.
மறுப்பு
ஆனால், ராஜிவ் சந்திரசேகர், சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. சில நிறுவனங்களில் அவருக்கு உள்ள பங்கை மறைப்பதாகவும் குற்றம்சாட்டின. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளித்தன. ஆனால், இதனை ராஜிவ் சந்திரசேகர் திட்டவட்டமாக மறுத்தார்.
உத்தரவு
இந்நிலையில், ராஜிவ் சந்திரசேகர் தாக்கல் செய்த சொத்து விவரங்கள் மற்றும் அவருக்கு உள்ள சொத்து விவரங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு ( சிபிடிடி) தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

