பிரிவினைவாதி யாசின் மாலிக்கை சிறையிலேயே விசாரிக்க உத்தரவு
பிரிவினைவாதி யாசின் மாலிக்கை சிறையிலேயே விசாரிக்க உத்தரவு
ADDED : நவ 22, 2024 12:49 AM

புதுடில்லி, ஜம்மு - காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் மீதான ஆள்கடத்தல் வழக்கை, திஹார் சிறையின் உள்ளேயே நீதிமன்ற அறை அமைத்து விசாரிக்க உத்தரவிட தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவர் யாசின் மாலிக், பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளித்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவை, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் பிறப்பித்தது.
முன்னதாக, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர், மறைந்த முப்தி முகமது சயீத்தின் மகள் ருபய்யா சயீத், 1989 டிச., 8ல் ஸ்ரீநகரில் வைத்து கடத்தப்பட்டார்.
அப்போதைய பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான அரசு, ஐந்து பயங்கரவாதிகளை விடுவித்த பின், ஐந்து நாட்கள் கழித்து ருபய்யா சயீத் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. ஜம்மு - காஷ்மீர் சிறப்பு தடா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. யாசின் மாலிக், வழக்கறிஞரை நியமிக்காமல், அவரே வழக்கில் வாதாடி வருகிறார்.
இந்நிலையில், வழக்கில் சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதை அடுத்து, தடா நீதிமன்றத்தில் அவரை நேரில் ஆஜர்படுத்தும்படி, 2020 செப்., 20ல் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மேல்முறையீடு செய்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, “யாசின் மாலிக்கை ஜம்மு அழைத்துச் செல்வது பாதுகாப்பானது அல்ல,” என, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.
குறுக்கு விசாரணையை, 'ஆன்லைன்' வாயிலாக நடத்த, சி.பி.ஐ., தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
குறுக்கு விசாரணையை, ஆன்லைன் வாயிலாக எப்படி நடத்த முடியும்? ஜம்முவில் தடையற்ற இணைய சேவை கிடைப்பது அரிது. மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளியான பயங்கரவாதி அஜ்மல் கசாப் வழக்கில் கூட நியாயமான விசாரணை நடத்தப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் அவருக்கு சட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
எனவே, யாசின் மாலிக்கை ஜம்மு அழைத்துச் செல்வது பாதுகாப்பற்றது எனில், திஹார் சிறை உள்ளேயே நீதிமன்ற அறையை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட முடியும். தடா நீதிமன்ற நீதிபதியை இங்கு வரவழைத்து விசாரணை நடத்தலாம்.
இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் முன், அனைத்து குற்றவாளிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும். யாசின் மாலிக், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரணைக்கு ஆஜராகலாம். விசாரணை, வரும் 28க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.