ADDED : ஜன 24, 2024 10:20 PM

வாரணாசி, வாரணாசி ஞானவாபி வளாகம் தொடர்பாக, தொல்லியல் துறை நடத்திய ஆய்வின் அறிக்கையை, வழக்கின் இரு தரப்புக்கும் வழங்க, மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி வளாகம் தொடர்பான வழக்கு, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த விவகாரத்தில், தொல்லியல் துறை ஆய்வு செய்ய, மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்தது.இதையடுத்து, தொல்லியல் துறையின் ஆய்வு நடந்து, கடந்த டிச., 18ல் ஆய்வறிக்கை, சீலிட்ட உறையில் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது ஹிந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று வாதிட்டார். ஆனால், தேவையில்லாத குழப்பங்கள், பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக, தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த அறிக்கையை வெளியிடுவது தொடர்பாக ஆய்வு செய்த மாவட்ட நீதிமன்றம், நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, இந்த அறிக்கையை, வழக்கில் தொடர்புடைய, ஹிந்து மற்றும் முஸ்லிம் என, இரு தரப்புக்கும் வழங்க உத்தரவிட்டது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

