போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு! மனித உரிமை ஆணையம் நடவடிக்கை
போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு! மனித உரிமை ஆணையம் நடவடிக்கை
ADDED : செப் 27, 2025 01:32 AM

பாலக்காடு: நீதிமன்றத்தில் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவான குற்றவாளி என நினைத்து, தவறாக மூதாட்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவத்தில், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் திருநெல்லாயி பகுதியை சேர்ந்த ராஜாகோபால் என்பவரின் தந்தை வீட்டில் வேலை பார்த்த பாரதி,43, என்ற பெண்ணை, வேலையில் இருந்து நீக்கிய கோபத்தில், தகாத வார்த்தைகளால் திட்டியும், வீட்டில் உள்ள பொருட்கள் சேதப்படுத்தியும் உள்ளார்.
இந்த சம்பவத்தில், பாலக்காடு டவுன் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, 1998 ஆக. 17ம் தேதி பாரதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் இருந்து ஜாமினில் வெளியே வந்த பாரதி தலைமறைவானார். அதன்பின், நீதிமன்றம் குற்றவாளிக்கு எதிராக கைது வாரண்டைப் பிறப்பித்தது.
இந்நிலையில், 2019 செப். 24ம் தேதி ஆலத்தூர் வடக்கேத்தறை பகுதியைச் சேர்ந்த பாரதி,80, என்ற மூதாட்டியை உண்மையான குற்றவாளி என்று, தவறுதலாக புரிந்து கொண்டு போலீசார் கைது செய்து பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அந்த மூதாட்டி, தான் குற்றமற்றவர் என்பதை நீதிமன்றத்திற்கு உணர்த்த முயன்றும் அது பலனளிக்கவில்லை. அதன்பின், வழக்கின் புகார்தாரரான ராஜகோபாலை சந்தித்து உண்மை நிலையை விளக்கியுள்ளார். அதன்பின், ராஜகோபாலின் சாட்சியத்தின் அடிப்படையில், மூதாட்டியை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்தது.
செய்த தப்பு என்னவென்று கூட அறியாமல், 80 வயது மூதாட்டியை நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளாக அலையவிட்டுள்ளனர். இந்த சம்பவம், பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது. செய்தியை அடிப்படையாக கொண்டு, மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது.
இந்த சம்பவம், காவல்துறை அதிகாரிகளின் தவறான நடத்தையை வெளிப்படுத்துகிறது. குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகள் மீது தகுந்து நடவடிக்கையை உள்துறை நிர்வாகம் எடுக்க வேண்டும், என, மனித உரிமை ஆணையர் நீதிபதி அலெக்சாண்டர் தாமஸ் உத்தரவிட்டார்.