ஓஸ்வால் குழும அதிபரின் மகள் உகாண்டாவில் சிறைபிடிப்பு
ஓஸ்வால் குழும அதிபரின் மகள் உகாண்டாவில் சிறைபிடிப்பு
ADDED : அக் 18, 2024 01:10 AM

புதுடில்லி, சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வால், தன் மகள் பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உகாண்டா நாட்டில் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கும்படியும் ஐ.நா., பணிக்குழுவிடம் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இந்திய வம்சாவளி தொழிலதிபர் அபய் குமார் ஓஸ்வால். இவரது, 'ஓஸ்வால் குரூப் குளோபல்' நிறுவனம் உலகம் முழுதும் பெட்ரோ கெமிக்கல்ஸ், ரியல் எஸ்டேட், உரம் மற்றும் சுரங்க தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.
இவரது மகன் பங்கஜ் குமார் ஓஸ்வால். இவர் ஓஸ்வால் ஆக்ரோ மில்ஸ் மற்றும் ஓஸ்வால் கிரீன்டெக் நிறுவனங்களை துவங்கி நடத்தி வருகிறார். மனைவி ராதிகாவுடன் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் உள்ள, 'பிஆர்ஓ இண்டஸ்ட்ரீஸ்' என்ற நிறுவனத்தின் செயல் இயக்குனராக ஓஸ்வாலின் மகள் வசுந்தரா ஓஸ்வால், 26, பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், உகாண்டா போலீசார் அவரை சட்டவிரோதமாக சிறைபிடித்து, கடந்த 1ம் தேதி முதல் காவலில் வைத்து உள்ளதாக பங்கஜ் ஓஸ்வால் குற்றம்சாட்டியுள்ளார்.
இவரது நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், நகைகளை திருடியதுடன், 1.60 கோடி ரூபாய் வங்கி கடன் பெற்றதாகவும், அதை திருப்பிச் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த கடன் தொகைக்கு ஓஸ்வால் குடும்பத்தினர் உத்தரவாதம் அளித்துள்ளதை அடுத்து, அவர்களிடம் பணத்தை திருப்பிச் செலுத்தும்படி வங்கி அழுத்தம் கொடுத்துள்ளது.
அவர்கள் பணத்தை செலுத்த மறுத்ததை அடுத்து, வசுந்தரா ஓஸ்வால் மீது கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்து, அவரை சட்டவிரோதமாக போலீசார் சிறைபிடித்துள்ளதாக ஓஸ்வால் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
சட்ட உதவியை நாடக்கூட அனுமதி மறுக்கப்படுவதாக பங்கஜ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உதவும்படி உகாண்ட அதிபரிடம் முறையிட்டுள்ளார். அதே நேரம், மகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி, ஐ.நா., பணிக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.